Lok Sabha Elections: இந்தியாவின் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. தங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றிய ஆய்வுகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். சின்னத்தை பார்த்தும், பிறர் சொல்வதைக் கேட்டும் மக்கள் வாக்களிப்பது சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அரசியல் புரிதல் அதிகமாகவே உள்ளது. சிறு ஆதாயங்களுக்காக ஆசைப்பட்டு ஐந்தாண்டுகள் அல்லல்பட மக்கள் தயாராக இல்லை. வேட்பாளர்களின் நோக்கம், அவர் செய்துள்ள சமூக பணிகள், மக்கள் சேவையில் அவரது அனுபவம், ஆர்வம், தகுதி என வாக்களிக்கும் முன் மக்கள் அனைத்தையும் அலசி ஆராய்கிறார்கள்.
பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் சில தொகுதிகள் மிக பிரபலமான தொகுதிகளாக இருக்கும். அவற்றில் நிற்கும் வேட்பாளர்கள், மக்கள், அத்தொகுதியின் சிறப்பம்சங்கள் என பல காரணங்களால் சில தொகுதிகள் மக்கள் மனதில் பதிந்துவிடும். அப்படிப்பட்ட தொகுதிகளில் கேரளாவின் வயநாடும் ஒன்று. கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இன்று தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும்.
வயநாட்டில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள்
கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் ( Congress) கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் சிபிஐ -இன் (CPI) அன்னி ராஜாவுக்கும் கடுமையான போட்டி உள்ளது. இருவருமே இந்தியா கூட்டணியின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்கள் தங்கள் சொத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து முக்கிய போட்டியாளர்களான ராகுல் காந்தி மற்றும் அன்னி ராஜா ஆகியோரின் சொத்து மதிப்புகளை ஒப்பிட்டு பார்ப்பதில் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ராகுல் காந்தியின் நிகர மதிப்பு எவ்வளவு?
கேரளாவின் வயநாட்டில் (Wayanad) வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி, ரூ.20 கோடி மதிப்பிலான தனது சொத்து விவரங்களை வெளியிட்டார். எனினும் இதில் வாகனங்கள் மற்றும் சொத்துரிமை பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை. வங்கி டெபாசிட்கள், பத்திரங்கள், பங்குகள், மியூசுவல் ஃபண்டுகள் மற்றும் நகைகள் உட்பட அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.9.24 கோடியாக உள்ளது. ராகுல் காந்தியின் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தம் ரூ. 11.15 கோடியாக உள்ளது. இதில் டெல்லியில் உள்ள விவசாய நிலம் மற்றும் குருகிராமில் உள்ள அலுவலக இடம் ஆகியவை அடங்கும். டெல்லியில் உள்ள விவசாய நிலத்தில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுக்கும் பங்குள்ளது. ரூ.4.3 கோடி மதிப்பிலான அவரது பங்கு மதிப்பில் ஏசியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற பல்வேறு முக்கிய நிறுவனங்களில் செய்யப்படுள்ள முதலீடுகள் அடங்கும்.
சட்ட தகராறுகள் மற்றும் வழக்குகள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ஈடுபட்ட சட்ட தகராறுகள் பற்றிய தகவல்களும் உள்ளன. பாஜக உறுப்பினர்களின் அவதூறு புகார்கள், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் தொடர்பான கிரிமினல் சதி வழக்கு, ஒரு போக்சோ வழக்கு ஆகியவை இதில் அடங்கும்.
ஆனி ராஜாவின் சொத்து மதிப்பு
CPI இன் ஆனி ராஜாவின் (Annie Raja) அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு 72 லட்சம் ரூபாயாக உள்ளது. ரூ.71 லட்சம் பரம்பரை சொத்துகளின் மதிப்பாக காட்டப்பட்டுள்ளது. அவரது நிதி இருப்புக்களில் தன்னிடம் அவர் வைத்துக்கொண்டுள்ள ஒரு குறைந்தபட்ச தொகை, வங்கி வைப்புத்தொகை, நகைகள் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவை அடங்கும். தன்னிடம் கையில் ரூ.10,000 ரொக்கம், ரூ.62,000 மதிப்புள்ள வங்கி டெபாசிட், ரூ.25,000 மதிப்புள்ள நகைகள் இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அன்னி ராஜா சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். அவர் சிபிஐ கட்சியின் இந்திய பெண்கள் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
வயநாட்டில் அனல் பறக்கும் போட்டி
வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், வயநாட்டின் தற்போதைய எம்பி -யான ராகுல் காந்திக்கு, சிபிஐ -இன் அன்னி ராஜா மற்றும் மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் ஆகியோரிடம் இருந்து கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை வயநாடு அவருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ