புது டெல்லி: JEE மற்றும் NEET 2020 தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Human Resource Development) அறிவிக்க உள்ளது. ஊரடங்கு மே 17 வரை மேலும் நீட்டித்ததால், தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான JEE-NEET தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) அறிவிக்க உள்ளார். இது தேர்வு அட்டவணை குறித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதே நாளில் அமைச்சர் ஆன்லைனில் மாணவர்களுடன் உரையாடுவார் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில், நீட் யுஜி (NEET UG) தேர்வு 2020 மே 3 ஆம் தேதிக்கும், ஜேஇஇ (JEE) முதன்மை தேர்வு ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்ததைத் தொடர்ந்து இரு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது முறையாக மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இப்போது மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஓரளவுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தமுறை சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து, நிலைமை இயல்பான பின்னரே தேர்வுகள் நடத்தப்படும். ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளுக்கான மாற்றி அமைக்கப்படும் தேதிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் செவ்வாய்க்கிழமை அறிவிப்பார்.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal), மாணவர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் (Twitter) மற்றும் பேஸ்புக்கில் (Facebook) ஒரு வெபினார் (Webinar) மூலம் பதில் அளிக்க உள்ளார். அவர் மே 5 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் உரையாற்றுவார்