யானைகள் பொதுவாக மென்மையான விலங்கு. மனிதன் என்னதான் அதைக் காட்டில் இருந்து அழைத்துக்கொண்டு வந்து வீட்டு விலங்காக பழக்கினாலும், காட்டின் குணம் யானைக்கு எப்போதும் மாறாது என்கின்றனர் சூழலியளாலர்கள். இது யானைக்கு மட்டுமல்ல ; காட்டின் எந்த விலங்குகளுக்கும் பொருந்தும் என்றும் சொல்கின்றனர். மதம் பிடிப்பது என்றால் என்ன ? முதலில் மதம் பிடிப்பது என்றால் யானைக்கு வரும் நோய் அல்ல. அது மிக இயல்பு. அதுவே இயற்கையும் கூட. அதாவது, யானைக்கு மதம் பிடித்துவிட்டது என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். யானையின் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் மதநீர் என்பது வழியும். இது ஆண் யானைகளுக்கு மட்டுமே நிகழும். பெண் யானைகளுக்க எக்காலத்திலும் மதநீர் சுரக்காது. பெண் யானைகளுக்கு மதமும் பிடிக்காது.
மேலும் படிக்க | யானை தந்தம் ஏன் மிகவும் விலை உயர்ந்தது? கோடிகள் கொடுக்கப்படுவது ஏன்?
இந்த மதநீர் ஆண் யானைக்கு சுரக்கும் போது, யானைகள் ஆக்ரோஷமாகவும், ஆபத்தாகவும் மாறுகின்றன. அந்த யானை பாலுணர்வு வேட்கையால் தூண்டப்பட்டு அதிக உக்கிரத்துடன் காணப்படும். வெறும் உடல் வேட்கையோடு மட்டும் இதை சூழலியலாளர்கள் அணுகவில்லை. கோவில்களில் யானைகள் நடத்தப்படும் விதிமுறை, இயற்கைக்கு முரணான அதன் வாழ்வியல் தன்மை, யானையின் உளவியல் பிரச்சனை என பரந்துப்பட்ட தளத்தில் விலங்கியல் ஆர்வலர்கள் இதை விவாதித்து வருகின்றனர். கோவில்களுக்கு இன்னும் யானைகள் தேவையா என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்த விவாதத்தை சூழலியல் ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர். அவ்வப்போது யானைக்கு மதம் பிடித்து பாகன்கள் பலியாகும் சம்பவங்கள், பொருட் சேதங்கள் என நடந்து வரும் நிலையில், கேரளாவில் சமீபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் மதம் பிடித்த கோவில் யானையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் படிக்க | தண்டவாளத்தை கடக்க முயலும் யானை கூட்டங்களின் திக் திக் நிமிடங்கள்!
கேரளா மாநிலம் எர்ணாகுளம் சேரா நல்லூர் பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட மாராடி ஐயப்பன் என்ற யானைக்கு மதம் பிடித்துள்ளது. பாகான்களால் யானையை கட்டுப்படுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்துமணி நேரம் போராடியும் எந்தப் பலனும் இல்லை. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மதம் பிடித்த யானையைப் பிடிக்க எவ்வளவோ முயன்றனர். எல்லாம் தோல்வியில் முடிந்ததால் மயக்க மருந்து செலுத்தி யானையை கட்டுப்படுத்தினர். கோவிலின் மதில் கட்டுக்குள்ளேயே யானை இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன. ஆனாலும், கோவிலின் உட்பகுதிக்குள் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் சில பொருட்களை சேதப்படுத்தியது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கோவில்களில் யானை வளர்ப்பு முறைகள், மேட்டுப்பாளையத்தில் ‘மட்டும்’ நடைபெறும் புத்துணர்ச்சி முகாம், பாகன்கள் யானைகளை பழக்கப்படுத்தும் விதம், உணவு மாற்றம் பிரச்சனை, பருவநிலைக் கோளாறு என யானைகள் குறித்துப் பேச வரிசை கட்டி நிற்கின்றன பிரச்சனைகள். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் யானைகள் மீது மனித இனம் நிகழ்த்தும் வன்முறை குறித்தான பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR