புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு அவதூறு வழக்கில் டெல்லி உயர் நீதிம்நாற்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இன்று பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் பெற்றுக்கொண்டனர். இந்த இரண்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு தலா ரூ.10,000 பத்திரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் அடுத்த விசாரணை தேதி ஜூலை 25 ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 8 ஆம் தேதி, இந்த வழக்கின் விசாரணையின் போது, ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா இருவருக்கும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.
2019 மக்களவை தேர்தலின் போது இந்திரா காந்தியைக் கொலை செய்தது போல, தன்னையும் கொலை செய்ய பாஜக திட்டமிட்டு வருவதாகவும், அதற்கு டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவுக்கு பங்கு உள்ளது எனக் கூறினார். இதேகருத்தை துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பொய்களைக் கூறி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார் விஜேந்தர் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.