அதி தீவிர புயலான ஃபனி புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது!!
வங்கக்கடலில் உருவான தீவிர புயலான ஃபனி புயல், நேற்று ஒரிசாவில் புரி பகுதியில் கரையை கடக்கும் போது, கோர தாண்டவம் ஆடியது. ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியுள்ளது. அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 200 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. காற்றுடன் பலத்த கனமழையும் பெய்ததையடுத்து, பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. மின்சேவை, தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டன.
ஆனால், புயல் வருவதற்கு முன்னதாகவே இந்திய வானிலை மையத்தின் அறிவுரைப்படி, கடலோரப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இருந்தும், பலத்த மழை காரணமாக நேற்று ஒடிசாவின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அரசு செயலக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.