Kolkata Woman Doctor Rape And Murder Case Latest News Updates: கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆக. 9ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தில் சஞ்சய் என்பவரை முக்கிய குற்றவாளி என கூறி போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் நான்காவது மாடிக்கு நடுராத்திரியில் சஞ்சய் ராய் ப்ளுடூத் ஹெட்போனுடம் சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அங்கிருந்து சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெளியேறியபோது, ராயின் காதில் அந்த ஹெட்போன் இல்லை. அந்த ஹெட்போன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளது, அந்த ஹெட்போன் சஞ்சய் ராயின் மொபைலில் கனெக்ட் ஆனதை உறுதிசெய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை தீவிரம்
காவல் துறை தரப்பில் மருத்துவமனையில் பணியாற்றும் தன்னார்வ பணியாளர்தான் சஞ்சய் ராய். இவர் காவல் துறையை சேர்ந்தவர் இல்லை, இருப்பினும், காவல் துறையின் கீழ் இயங்கும் ஒப்பந்த பணியாளர் ஆவார். இவருக்கு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு கொல்கத்தா போலீசாரிடம் இருந்து சிபிஐ வசம் சென்றது. மேலும், இந்த வழக்கு கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. சஞ்சய் ராயை மட்டுமின்றி ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், உயிரிழந்த பெண்ணுடன் பணியாற்றிய 4 மருத்துவர்கள், சஞ்சய் ராயின் நண்பரான தன்னார்வ பணியாளரும், சஞ்சய் ராயின் நண்பராக அறியப்படும் கொல்கத்தா போலீஸ் அதிகாரி அனுப் தத்தா ஆகியோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கமிஷனர் பெயரில் பதிவான குற்றவாளியின் பைக்
கொல்கத்தாவிலும், மேற்கு வங்கத்திலும் இந்த கொலைக்கு நீதி வேண்டும் என மக்கள் போராடி வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதும், கொல்கத்தா காவல்துறை மீதும் பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
அந்த வகையில், சஞ்சய் ராய் குற்றம் நடந்த அன்று பயன்படுத்திய பைக் காவல் கண்காணிப்பாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த காவல் கண்காணிப்பாளர்தான் அந்த பெண்ணின் உயிரிழப்பை விசாரிக்கும் முன்னரே தற்கொலை என அறிவித்தவர் என பாஜகவின் தேசிய தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் அமித் மால்வியா பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த காவல் கண்காணிப்பாளர் உடன்தான் மேற்கு வங்க முதலமைச்சர் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
This is a massive revelation.
Sanjoy Roy, accused in the RG Kar MCH rape and murder case, as per Kolkata Police and the TMC, on the fateful night, was riding a bike registered in the name of Kolkata Police Commissioner. The same Commissioner, who called it a suicide, without…
— Amit Malviya (@amitmalviya) August 27, 2024
எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நியாயமான விசாரணைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், கொல்கத்தா காவல் கண்காணிப்பாளரும் தங்களின் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சிபிஐ இவர்களை தங்களின் காவலில் எடுத்து அவர்களின் மொபைல் பதிவுகளை ஆய்வு செய்து, இந்த கொலைக்கு பின்னுள்ள சதியை வெளியுலகிற்கு கொண்டுவர அவர்களுக்கு உண்மை அறியும் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
போதை மருந்து புழக்கமா?
மேலும் அவர் அந்த பதிவில், "மருத்துவமனையின் மார்பு மருத்துவத் துறையில் இருப்பதாக கூறப்படும் போதை மருந்து புழக்கத்தை உயிரிழந்த பெண் மருத்துவர் கண்டுபிடித்தாரா...? உயிரிழந்த பெண் ஒரு நுரையீரல் நிபுணராக இருந்தார். காசநோய் மருந்துகளை உதாரணத்திற்கு வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி பெரிய அளவில் வாங்கப்பட்டது என வைத்துக்கொள்வோம். அந்த ஒரிஜினல் மருந்துகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதற்கு பதிலாக நீர்த்த/அசுத்தமான மாதிரிகளை கொண்டு வரும் மாஃபியா உள்ளதா?" எனவும் அவர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.
மேலும்,"இதில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. கொல்கத்தா காவல்துறையும், மம்தா பானர்ஜியும் அனைத்து ஆதாரங்களையும் அகற்றி, சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்திருப்பதால், சிபிஐக்கு கடினமான வேலை இருக்கிறது" என கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கொடுத்த விளக்கம்
கொல்கத்தா காவல்துறை அதன் X பதிவில்,"ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடந்த கொலை குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் சஞ்சய் ராயிடம் இருந்து கொல்கத்தா போலீசார் அவரின் பைக்கை பறிமுதல் செய்தனர். அதாவது, சிபிஐ வசம் வழக்கு செல்லும் முன்னரே பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. அந்த பைக் காவல் துறை கண்காணிப்பாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதுதான்.
— Kolkata Police (@KolkataPolice) August 27, 2024
ஆனால் அதை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர். கொல்கத்தா காவல்துறை சார்ந்த அனைத்து அரசு வாகனங்களும் காவல் கண்காணிப்பாளரின் பெயரிலேயே பதிவு செய்யப்படும் என்பதை இங்கு விளக்க விரும்புகிறோம். அதன்பின்னர் அந்த வாகனங்கள் பல பிரிவினருக்கு வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளார். சஞ்சய் ராய் கொல்கத்தா காவல்துறையின் தன்னார்வ பணியாளர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
சீறிய மம்தா
பாஜகவின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பதிலடி வழங்கி உள்ளார். மக்கள் இந்த வழக்கில் நீதி வேண்டும் என போராடி வருகின்றனர், ஆனால் பாஜக பிணங்கள் மீது அரசியல் செய்ய பார்க்கிறது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது என்று கூறினார். பாஜக மேற்கு வங்கத்தின் புகழுக்கு கலங்கம் பிறப்பிக்கிறது எனவும் மம்தா சீறினார். வழக்கை சிபிஐ கையில் எடுத்து 16 நாள்கள் ஆகிவிட்டது, நீதி எங்கே என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
சிபிஐயை கிழித்தெடுத்த சிபிஐ
இந்த வழக்கை கொல்கத்தா காவல்துறையே முதல் ஒருவாரம் விசாரிக்கட்டும் என்றும் அதில் குற்றவாளிகள் பிடிபடாவிட்டால் வழக்கை சிபிஐ எடுத்துக்கொள்ளட்டும் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனால், சிபிஐ உடனடியாக இந்த வழக்கை தன்வசம் கொண்டுவந்தது. 'வழக்கை தாமதப்படுத்தி, நீதியை தள்ளிப்போடுவதே சிபிஐயின் நோக்கம்' எனவும் மம்தா சிபிஐ மீது சாடினார்.
Kolkata | West Bengal CM Mamata Banerjee says, "Next week, we will call an Assembly session and pass a Bill within 10 days to ensure capital punishment for rapists. We will send this Bill to the Governor. If he doesn't pass, we will sit outside Raj Bhavan. This Bill must be… pic.twitter.com/GQFPvTStZX
— ANI (@ANI) August 28, 2024
மேலும், அடுத்த 10 நாள்களில் சட்டப்பேரவையை கூட்டி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்த மம்தா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மட்டுமே ஒரே தண்டனையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நடிகர் சித்திக் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்! பிரபல நடிகை குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ