தேசிய குடியுரிமைப் பதிவேடு எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேடு மூலம் மேற்கு வங்கத்தில் அமைதியற்ற சூழலையும், பதற்றத்தையும் பாஜக ஏற்படுத்தி வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் நாள் தேசிய குடியுரிமைப் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருந்தன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைப்பெற்ற தொழிற்சாலை கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நிருபர்களிடம் கூறியதாவது., மேற்கு வங்கத்தில் ஒருபோதும் தேசிய குடியுரிமை பதிவேடு பின்பற்றப்படாது. அசாம் மாநிலத்தில் பின்பற்றுவதற்கு மட்டுமே சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு ராஜீவ் அரசுக்கும், அனைத்திந்திய அசாம் மாணவர்கள் அமைப்புக்கும் இடையே நடந்த பிரச்னையில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் வருவதை தடுக்க இது அமல்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு மாநிலங்களில் பாஜக., பதற்றமான சூழலையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்கி வருவது வெட்கக்கேடு. இதுவரை தேசிய குடியுரிமை பதிவேடு வந்துவிடும் எனும் அச்சத்தால் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேடு கொண்டுவர நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இது போல் மத்திய அரசின் வங்கிகள் இணைப்பும் சரியல்ல.
நாட்டில் ஜனநாயக மதிப்புகளைக் குறைத்து மதிப்பிட்டு பாஜக., செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் உயிருடன் தான் இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகள், வேலையின்மை ஆகியவை குறித்து பாஜக பேசுவதில்லை. தன்னுடைய அரசியல் லாபத்துக்கான விஷயங்களை மட்டுமே பாஜக பேசி வருகிறது என தெரிவித்துள்ளார்.