கடந்த சில நாட்களாக உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீரின் அளவு அதிகரித்து ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தால் ஹரியானா மாநிலத்திற்கு அதிக அளவில் நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. ஹத்னிக்குந்த் குறுக்கு அணை நிரம்பியதால், அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால், தலைநகர் டெல்லியில் பாயும் யமுனா நதி அபாயகரமான நிலையை எட்டி உள்ளது.
யமுனா நதியின் எச்சரிக்கை நிலை 204 மீட்டர் மற்றும் அபாய நிலை 204.83 மீட்டர் ஆகும். இன்று காலை 11 மணியளவில் தில்லி இரயில்வே பாலத்தின் கீழ் ஓடும் யமுனா நதியின் நீர் மட்டம் 205.12 மீட்டர் இருந்தது என வெள்ளம் மற்றும் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் டெல்லியிலும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தலைநகர் டெல்லிக்கு குடிநீர் வழங்கி வரும் ஹத்னிக்குந்த் குறுக்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பொதுவாக டெல்லியை வந்தடைய சுமார் 72 மணி நேரம் ஆகும்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில் டெல்லியில் வெள்ளம் ஏற்ப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது என தகவல் வந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு யமுனா நதியின் கொள்ளளவு அபாய நிலையை தாண்டி 207.49 மீட்டர் உயர்ந்ததால், வெள்ளம் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.