பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% உயர்வு செய்யப்பட்டது என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். புல்மாவா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சுங்கவரி உயர்வு உடனடியாக அமல் படுத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (பிப்., 14) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சார்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகிய இரு வீரர்கள் உட்பட 44 CRPF வீரர்கள் பலி ஆனார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எல்லா பொருள்களுக்கான சுங்க வரியைச் 200 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குப் பழ வகைகள், சிமெண்ட்கள், பெட்ரோலியம் சார்ந்த பொருள்கள் மற்றும் கனிம தாதுகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படு கின்றன. கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் 3,482 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. புல்வாமா சம்பவத்திற்குப் பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியைச் 200 சதவீதமாக அதிகரிக்கும் நடவடிக்கையானது பாகிஸ்தானின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படுகின்றது.
அதேபோல் இந்தியா பாகிஸ்தானிற்கு வழங்கி வந்த நெருங்கிய வர்த்தக கூட்டு நாடுகளுக்கான அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “ பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நெருங்க வர்த்தக கூட்டு நாட்டிற்கான அந்தஸ்தைத் திரும்ப பெற்றுள்ளோம். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியை உடனடியாக 200 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.