மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7-வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத உயர்வுடன் மொத்தத்தில் 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க சிபாரிசு செய்திருந்தது. குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தவும், அதிகபட்ச சம்பளத்தை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தவும் சிபாரிசு செய்திருந்தது. 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. சம்பள உயர்வை கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், பரிந்துரைகள் அமல்படுத்தப்படுத்தப்பட்டது குறித்து மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கை வெளியானதன் மூலம், ஆகஸ்ட் மாதம் பெறும்
சம்பளத்தில் இருந்து உயர்த்தப்பட்ட சம்பள தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெறுவார்கள்.