பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 147 இந்திய மீனவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தனர்!
8 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, பாக்கிஸ்தான் கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் தற்போது நன்நடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்லாமாபாத் காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மத் பைசால் டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது... கிட்டத்தட்ட 300 இந்திய மீனவர்கள் இரண்டு கட்டங்களாக ஜனவரி 8-ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படுவர் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி கடந்த டிசம்பர் 28-ஆம் நாள் பாகிஸ்தானில் இருந்த 145 இந்திய மீனவர்கள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் இரண்டாம் கட்டமாக நேற்று 147 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, லாகூர் கராச்சி கன்டான்ட்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து நேற்று பிற்பகள் அலாமா இக்பால் எக்ஸ்பிரஸ் வாயிலாக பயணிக்க துவங்கினர்.
இந்நிலையில் இன்று அம்மீனவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தனர். மேலும் இம்மீனவர்களின் பயணச் செலவுகள், பாக்கிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற நலன்புரி அமைப்பான எதிஹி பவுண்டேஷன் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.