கடந்த ஆண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அத்துறையின் செயலாளராக இருந்த உதயசந்திரனும் பள்ளிக் கல்வித்துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்தனர். அதில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்ற மதிப்பெண் முறை மாற்றப்படும் என அறிவித்தனர்.
மேலும் இதை தொடர்ந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர். அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 11-ம் வகுப்புக்கு தேர்வுகள், கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடந்தது. இதில், சுமார் 8,63,668 பேர் இந்த தேர்வை எழுதினர். சுமார் 2,795 மையங்களில் தேர்வுகள் நடந்தன.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததை அடுத்து, இன்று 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியபோது ''12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தும்போதே, அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களிலேயே மதிப்பெண்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்கியுள்ளது. ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணும் உடனுக்குடன் கணினியில் பதிவேற்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே, விடைத்தாள்களைத் திருத்திய அன்றே மதிப்பெண் பட்டியல் தயாராகிவிடும். கடந்த ஆண்டு அறிவித்தப்படி, 11-ம் வகுப்புபொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். 12-ம் வகுப்பு தேர்வு முடிகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன'' என்று சொன்னார்கள்.