Income Tax கட்டாமல் இருக்க ஈசி டிப்ஸ்: இப்படி செய்தால் வரியே கட்ட வேண்டாம்

Income Tax Saving: பொதுவாக வருமான வரிச் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரிவு 80சி (80C). ஆனால், 80சி இல்லாமலும் 10 வழிகளின் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 6, 2024, 12:38 PM IST
  • வங்கி வட்டி சேமிப்பு.
  • மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ செலவுகள்.
  • வீட்டு வாடகை கொடுப்பனவு.
Income Tax கட்டாமல் இருக்க ஈசி டிப்ஸ்: இப்படி செய்தால் வரியே கட்ட வேண்டாம் title=

Income Tax Saving: நீங்கள் இதுவரை வரிச் சேமிப்பு எதுவும் செய்யவில்லையா? இன்னும் உங்களுக்கு மூன்று மாதங்கள் உள்ளன. இந்த மூன்று மாதங்களில் முதலீடு செய்தால், வரியிலிருந்து தப்பிக்கலாம். ஒரு நிதியாண்டில் வரிச் சேமிப்புக்கு உங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்படுகின்றது. இப்போது ஜனவரி தொடங்கிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், கடைசி நேரத்தில் செய்யபப்டும் சேமிப்பு உங்களுக்கு வரி கழிக்கப்படாமல் பாதுகாக்கும். பொதுவாக வருமான வரிச் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரிவு 80சி (80C). ஆனால், 80சி இல்லாமலும் 10 வழிகளின் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும். 

இந்த வழிகளில் வரி மிச்சமாகும்

வருமான வரியைச் (Income Tax) சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழி 80C ஆகும். ஆனால் பெரும்பாலான சேமிப்புத் திட்டங்கள் அதன் வரம்புக்கு உட்பட்டவையாக உள்ளன. மெலும் இதில் விலக்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். ஆனால், சில சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், வரியாக ஒரு ரூபாய் கூட கழிக்கப்படாது. அப்படி கழிக்கப்பட்டாலும் பணம் திரும்பக் கிடைப்பது நிச்சயம். வரியை சேமிக்க உதவும் அந்த வழிகளை பற்றி இங்கே காணலாம். 

1) தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme) 

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS), நீங்கள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரியைச் சேமிக்கிறீர்கள். ஆனால் இதற்கு மேல், பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதலாகச் சேமிக்கலாம். அதாவது மொத்தம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

2) உடல்நலக் காப்பீடு (Health Insurance)

பிரிவு 80D இன் கீழ் நீங்கள் சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை கோரலாம். 80டியின் கீழ் உங்களுக்கு எவ்வளவு வரி விலக்கு கிடைக்கும் என்பது இந்த பாலிசியில் யார் சேர்க்கப்பட்டுள்ளர்கள் மற்றும் அவர்களின் வயது என்ன என்பதைப் பொறுத்தது. இதன் மூலம் ரூ.25,000, ரூ.50,000 மற்றும் ரூ.1 லட்சம் வரை வரி சேமிப்புகளை நீங்கள் கோரலாம்.

3) கல்விக் கடன் (Education Loan)

உங்கள் குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பிச் செலுத்துவதற்கு வரி விலக்கு (Tax Exemption) கோரலாம். பிரிவு 80E இன் கீழ், கல்விக் கடனின் வட்டிப் பகுதிக்கு வரி விலக்கு பெறலாம். இந்த வரி விலக்கு பெற்றோரோ அல்லது குழந்தையோ பெறலாம், அது கடனை யார் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது. இதில் வரிவிலக்குக்கு வரம்பு இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் வட்டிக்கு வரிவிலக்கு பெறலாம்.

4) வீட்டுக் கடன் வட்டி (Home Loan Interest)

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வழிகளில் வரி விலக்கு கோரலாம். அசல் தொகையில் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரி விலக்கு பெறுவது மட்டுமின்றி, பிரிவு 24ன் (Section 24) கீழ் வட்டிக் கூறுகளின் மீதும் விலக்கு பெறலாம். இந்த பிரிவின் கீழ், சொத்து உங்கள் பெயரில் இருந்தால், அதில் நீங்கள் வசிக்கிறீர்கள் எனில், அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். நீங்கள் அந்த வீட்டில் வசிக்காமல், வாடகைக்குக் கொடுத்திருந்தால், வரி விலக்கு கோருவதற்கு வரம்பு இல்லை, அதாவது, ஒரு வருடத்தில் நீங்கள் செலுத்திய வட்டிக்கு, முழுத் தொகையும் வரி விலக்கு வரம்பிற்குள் வரும்.

5) முதல் முறையாக வீடு வாங்குபவர் (First Time Home Buyers) 

இதற்கு முன் உங்கள் பெயரில் வேறு எந்த வீடும் இல்லை என்ற பட்சத்தில், முதல் வீட்டை வாங்குபவர்களுக்கு, பிரிவு 80EE இன் கீழ் வீட்டுக் கடன் வட்டியில் கூடுதல் விலக்கு அளிக்கிறது அரசாங்கம். இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் ரூ. 50,000 வரை கூடுதல் வரியைப் பெறலாம். இந்த விலக்கு பிரிவு 24ன் கீழ் கிடைக்கும் கூடுதல் விலக்காகும். அதாவது, முதல்முறையாக வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடன் (Home Loan) வட்டியில் மட்டும் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் தள்ளுபடி பெறுகிறார்கள். இதற்கான நிபந்தனை என்னவென்றால், சொத்தின் விலை ரூ.50 லட்சத்துக்கு குறைவாகவும், கடன் ரூ.35 லட்சத்துக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள்

6) வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) 

நீங்கள் சம்பளம் பெற்று உங்கள் நிறுவனம் HRA ஐ வழங்கினால், வாடகைக்கு வரி விலக்கு கிடைக்கும். ஆனால் நீங்கள் HRA பெறவில்லை என்றால், நீங்கள் வீட்டு வாடகைக்கு வரி விலக்கு கோர முடியாது. நீங்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் போது அல்லது சொந்தமாக சில வேலைகளைச் செய்யும்போது இது நிகழ்கிறது. அத்தகைய நபர்களுக்கு 80GG பிரிவின் விருப்பத்தை அரசாங்கம் வழங்குகிறது.

7) வங்கி வட்டி சேமிப்பு (Savings Account Interest) 

சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்து (Savings Account) பெறப்படும் வட்டிக்கும் வரிவிலக்கு பெறலாம். பிரிவு 80TTA இன் கீழ், எந்தவொரு தனிநபரும் அல்லது HUFகளும் அதிகபட்சமாக ரூ.10,000 வரை வரிவிலக்கு பெறலாம். இதில் வங்கி, கூட்டுறவு சங்கம் அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு ஆகியவை அடங்கும். இந்த வரிவிலக்கு அனைவருக்கும் உள்ளது, அதற்கு மூத்த குடிமகன் என்ற நிபந்தனை இல்லை. 10,000 க்கும் அதிகமான வட்டி மற்ற வருமானத்தின் பிரிவில் கணக்கிடப்படும், அதற்கு வரி செலுத்த வேண்டும்.

8) மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ செலவுகள் (Medical Expences of Differently Abled) 

ஊனமுற்ற நபரை நீங்கள் கவனித்துக்கொண்டால், பிரிவு 80DD இன் கீழ் அவருக்கு ஏற்படும் செலவுகளை நீங்கள் கோரலாம். அந்த ஊனமுற்ற நபர், பெற்றோர், குழந்தை அல்லது உடன்பிறந்தவர் போன்ற குடும்பத்தின் எந்த உறுப்பினராகவும் இருக்கலாம். ஊனமுற்ற நபரின் ஊனத்தைப் பொறுத்து வரி விலக்கு கிடைக்கும். இதில், ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

9) குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சை (80DDB)

புற்றுநோய், நரம்பியல் நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற சில நோய்களுக்கான சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. 80DDB பிரிவின் கீழ் அரசாங்கம் 40,000 ரூபாய் வரை இதில் வரிவிலக்கு அளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) இந்த வரி விலக்கு ரூ.1 லட்சம்.

10) நன்கொடை (80G)

நீங்கள் தொண்டு செய்தால், அதன் மூலமும் வரியைச் சேமிக்கலாம். பிரிவு 80G இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் நன்கொடை வரி விலக்கு வரம்பின் கீழ் வருகிறது. இருப்பினும், முழு நன்கொடைக்கும் விலக்கு கிடைக்காது.

மேலும் படிக்க | Insurance: 1 ரூபாய் செலவில்லாம கிடைக்கும் காப்பீடு! LPGக்கு ரூ 50 லட்சம் இன்சூரன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News