வர்த்தகத்தை மேம்படுத்துவதில் விதிகளை எளிதாக்கி, வர்த்தகத்திற்கான சிறந்த சூழலை உருவாக்கியுள்ள இந்திய மாநிலங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதைக் காட்டும் 'மாநில வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2019' (BARP) தரவரிசை பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில், ஈஸி ஆஃப் டூயிங் பிஸினஸ், அதாவது வர்த்தம் செய்ய ஏற்ற மாநிலங்கள் தர வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆண்டிற்கான தரவரிசைகளை வெளியிட்டார். இதில் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
உத்தரபிரதேசம் 2018 தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தெலுங்கானா இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
அந்த வரிசையில் தெலுங்கானாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தரவரிசை பட்டியலில் டெல்லி 12 வது இடத்தில் உள்ளது. தேசிய தலைநகரம் 2018 ஆண்டில் 23 வது இடத்தில் இருந்தது.
அறிக்கையை வெளியிடும் போது, சீதாராமன், தரவரிசையில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வணிகம் செய்ய சிறந்த இடமாக கருதப்படுகிறது என்றார்.
கட்டுமானத்திற்கான அனுமதி, தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பதிவு, தகவல்களை எளிதில் பெறுதல், நிலம் மற்றும் ஒற்றை சாளர அமைப்பு போன்ற வசதிகளை பொறுத்து மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
ALSO READ | கோயம்புத்தூர் மும்பை இடையிலான நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா..!!!
இந்த தரவரிசை வணிக சீர்திருத்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
"வணிகத்தை விரைவாகவும் சிக்கனமாகவும் மாற்றுவதற்கான சிங்கிள் விண்டோ சிஸ்டம், அமைப்பு, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், பிரச்சனையை தீர்ப்பதற்கான சட்டத்தில் சீர்திருத்தங்கள் போன்றவற்றின் மூலம் வணிக நெறிமுறைகளை சீராக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்று அவர் கூறினார்.
"சில மாநிலங்கள் செயல் திட்டங்களை ஒன்றிணைப்பதிலும், சீர்திருத்தங்கள் நடப்பதை உறுதி செய்வதிலும் சிறந்த முன்னேற்றத்தை காட்டியுள்ளன. மாநில வணிக சீர்திருத்த செயல் திட்டத்தின் பின்னால் உள்ள நேர்மையான நோக்கத்தை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன" என்று மத்திய நிதியமைச்சர் சீதாராமன் கூறினார்.
ALSO READ | சிக்கிமில் 'ஜீரோ டிகிரி'யில் வழி தவறி தவித்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்..!!
கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டி துறை (டிபிஐஐடி) 2015 ஆம் ஆண்டில் மாநில சீர்திருத்தங்களுக்கான செயல் திட்டத்தை உருவாக்கியது. வணிகங்கள் இயங்குவதை எளிமையாக்க, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சீர்திருத்தங்களுக்கான திட்டத்தை இது தொடங்கியது. இந்த சீர்திருத்தங்கள் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஜூலை 2018 இல் கடைசியாக வெளியிடப்பட்ட தரவரிசையில், ஆந்திரா முதலிடத்திலும், தெலுங்கானா மற்றும் ஹரியானா இரண்டாவது இடத்திலும் இருந்தன.