தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்திய பகுதியில் (வியாழக்கிழமை) இன்று கொரோனா வைரஸ் நோயை உறுதிப்படுத்தியதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு ஒரு விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் சஞ்சீவ்குமார் விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இந்நிலையில் திதிபெத் தன்னாட்சி பகுதியில் (வியாழக்கிழமை) இன்று கொரோனா வைரஸ் நோயை உறுதிப்படுத்தியதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதில் சீன மாகாணமான ஹூபேயைச் சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுஜோ நகரத்தைச் சேர்ந்த ஜாங் என்ற பெயர் கொண்ட 34 வயது நோயாளி ஜனவரி 24 ஆம் தேதி வுஹானில் இருந்து ரயிலில் லாசா வந்து, மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திபெத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன பெருநிலப்பரப்பு முழுவதும் தற்போது இந்த வைரஸ் பரவியுள்ளது உறுதியாகிறது.