அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல காலங்களாக அந்நாட்டின் வளர்ச்சியில் பல்வேறு வழிகளில் பங்களித்து வருகிறார்கள்.பொருளாதாரம், அரசியல், அறிவியல், சமூகப் பணிகள் என அனைத்துத் துறைகளிலும் இவர்களது பணிகள் பாராட்டத்தக்க வகையில் இருந்துள்ளன.
அவ்வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேதா ராஜிற்கு (Medha Raj) தற்போது மிகப்பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அமெரிக்க (America) டெமாக்ரடிக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனின் (Joe Biden) தேர்தல் பிரச்சாரத்திற்கான டிஜிட்டல் துறையின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது உலகில் கொரோனா (Corona) வைரஸ் பரவி இருக்கும் நிலையில், அமெரிக்க தேர்தல்களில் வர்சுவல் அதாவது இணையவழி பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், மேதாவிற்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பிற்கான முக்கியத்துவமும் அதிகமாகின்றது.
தேர்தல் பிரச்சாரத்தின் பெரும் பங்கு இம்முறை டிஜிட்டல் முறையில் செய்யப்படும். வர்சுவல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி காண்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அதிபர் வேட்பாளரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான பொறுப்பு வழங்கப்படுவது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ALSO READ: அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே!!
டிஜிட்டல் தளத்தின் அனைத்து அம்சங்களிலும் மேதா ராஜ் பணிபுரிவார் என பிடெனின் தேர்தல் பிரச்சார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரசார முடிவுகளை பிடெனுக்கு சாதகமாக்குவதில் அதிக கவனம் செலுத்தி, முடிவுகளில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைக் கொண்டு வருவது அவரது முக்கியப் பணியாக இருக்கும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேதா ராஜ், ஜார்ஜ்டௌன் பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதுகலைப் பட்டம் பெற்றார்.
நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல்கள் (American Elections) நடக்கவுள்ளன. இந்தத் தேர்தல்களில், ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்த, தற்போதைய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் (Donald Trump) , டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை அதிபர், 77 வயதான ஜோ பிடெனும் போட்டியிடுவார்கள்.