அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் ஜூலை 22-ஆம் தேதி அதிபர் டிரம்பை சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது!
பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்த நாட்டின் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி, அமெரிக்கா அந்த நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை நிறுத்தியது.
மேலும் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என்று டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 5 நாள் அரசுமுறை பயணமாக வரும் ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது முதல் முறையாக அவர் டிரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்பை வரும் ஜூலை 22-ஆம் தேதி சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவிக்கையில்., பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அதிபர் டிரம்பை ஜூலை 22-ஆம் தேதி சந்தித்து பேச உள்ளார். இருவரது சந்திப்பு முதல் முறையாக நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.