Viral Photos Of Dhanush And Nayanthara: தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
நடிகர்கள் நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகியோருக்கு இடையே பிரச்னை இருப்பது சமீபத்தில் பொதுவெளியில் அம்பலமானது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்னர், பட விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிபேசியிருந்த நிலையில், அவர்களுக்கு கருத்து முரண்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனுஷ் - நயன்தாரா - சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படமான 'Nayanthara: Beyond the Fairy Tale' நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று வெளியானது.
இந்த ஆவணப்படத்தில், 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையேயான காட்சிகளை பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், அந்த ஆவணப்படத்தின் டீசரில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்றை 3 வினாடிகள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு தனுஷ், ரூ.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாரா (Nayanthara), விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) தரப்புக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை பொதுவெளியில் பகிர்ந்தது மட்டுமின்றி, தங்கள் மீது உள்ள தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவே தனுஷ் (Dhanush) இதற்கு அனுமதி அளிக்க மறுத்ததாக கூறி பொதுவெளியில் தனுஷிற்கு நயன்தாரா மூன்று பக்கத்திற்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார். இது திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியது.
அதேபோல், நயன்தாரா அவரது ஆவணப்படத்திற்கு திரைப்பட காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் அளித்த தயாரிப்பாளர், இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். அதிலும் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தனுஷ் இயக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் (Aakash Bhaskar Marriage Function) திருமண நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது. ஆகாஷ் பாஸ்கர் விக்னேஷ் சிவனிடம் நானும் ரௌடி தான், காத்துவாக்குல இரண்டு காதல், பாவக்கதைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
அவரது திருமண நிகழ்வில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), அவரது மனைவி ஆர்த்தி, அனிருத், தனுஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா, சிவகார்த்திகேயன், ஆர்த்தி, அனிருத் ஆகியோர் மணமக்களுடன் நிற்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. மேலும், நயன்தாராவும், ஆர்த்தியும் அருகருகில் அமர்ந்து பேசும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், திருமண விழாவின் முதல் வரிசையில் ஒரு பக்கம் தனுஷ் அமர்ந்திருக்க, மறு பக்கம் நயன்தாரா அமர்ந்திருக்கிறார். ஆனால், இந்த புகைப்படங்கள், தற்போது வைரலாக பரவி வருகிறது. தனுஷிற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடன் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் உடனும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது உண்டு. அதேபோல், தனுஷிற்கும், அனிருத்தின் (Anirudh) நட்பிலும் விரிசல் ஏற்பட்டதாக பேச்சுகள் அடிபடுவது உண்டு.