ரஷ்ய கடல் பகுதியில் தான்சானியா நாட்டுக்கொடியுடன் கேண்டி மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய இரு கப்பல்கள் இருந்தன. கேண்டி கப்பலில் 17 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 8 பேர் இந்தியர்கள், 9 பேர் துருக்கியர்கள் இருந்தனர். மற்றொரு கப்பலான மேஸ்ட்ரோவில் மொத்தம் 15 பேர் இருந்தனர். அவர்களில் துருக்கியர்கள் மற்றும் இந்தியர்கள் 7 பேர் மற்றும் லிபியாவை சேர்ந்த ஒருவர் என இருந்தனர்.
ஒரு கப்பலில் இருந்த திரவ இயற்கை எரிபொருளை மற்றொரு கப்பலுக்கு மாற்றம் செய்தபோது எதிர்பாராத விதமா தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட மொத்தம் 14 பேர் பலியாகியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மற்றவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தனர். உயிர் பலி பற்றி முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை. கடலில் குதித்தவர்களை தேடும் பணியில் ரஷ்ய கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் இந்தியர்களும் பலியாகி உள்ளதால், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், சம்பந்தப்பட்ட ரஷ்ய ஏஜென்சிகளுடன் தொடர்பு கொண்டு, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் தகவலைப் பெறவும், அவர்களுக்கு தேவையான உதவியை விரிவுபடுத்தவும் கூறப்பட்டு உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.