1993-ம் ஆண்டில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு `ஐரோப்பிய யூனியன்` என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.
இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து மக்கள் கருத தொடங்கினார்கள். எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது.
ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை அறிய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இங்கிலாந்து முழுவதும் எழுந்தது. இதைத்தொடர்ந்து, பொதுவாக்கெடுப்பு நடத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.
ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதை அதன் நட்பு நாடுகள் விரும்பவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நேட்டா, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்தை கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க இங்கிலாந்தில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஓட்டுப்போடுகிறார்கள். இதன் முடிவு நாளை காலை 6 மணிக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.