நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இரண்டு மசூதிகளில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி!!
நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இரண்டு மசூதிகளில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.
இதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதற்கிடையே, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை நடப்பதாக இருந்தது. இந்தப் போட்டி நடக்கு மா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Entire team got saved from active shooters!!! Frightening experience and please keep us in your prayers #christchurchMosqueAttack
— Tamim Iqbal Khan (@TamimOfficial28) March 15, 2019
கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால்; துப்பாக்கிச்சூட்டில் இருந்து மொத்த அணியும் காப்பாற்றப்பட்டுவிட்டது. அச்சமூட்டும் அனுபவம். தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
முஷ்பிகுர் ரஹீம்; கடவுள் எங்களை காப்பாற்றிவிட்டார். நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற சம்பவம் இன்னொரு முறை நடக்கக் கூடாது. எங்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.