இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது!
நீர்சத்து குறைவின் காரணமாகவும், சிறுநீரக பிரச்சனை காரணமாகவும் வேல்முருகன் அவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய காவல்துறையினர் அவர்மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசத்துரோக வழக்கப் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழ்நாட்டின் அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 124A தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை ஏவியுள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அதிமுக அரசின் பாசிச போக்கை எதிர்த்து, தமிழக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த உண்மைப் போராளி வேல்முருகன் மீது இந்த அடக்குமுறையை ஏவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
என் மீதும் தேச துரோகக் குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளையும் அஞ்சாமல் எதிர்கொள்வோம்; வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கையும் எதிர்கொண்டு முறியடிப்போம்.
இந்த அராஜக நடவடிக்கையால் வேல்முருகன் மேலும் வீறுகொண்டு களத்துக்கு வருவார். கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே என்ற நிலைமைக்கு அதிமுக அரசு ஆளாகும் என எச்சரிக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்!