அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்!! எனக்கு ஏன் ஸ்டாலின் பெயர்? MKS விளக்கம்

சீர்திருத்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனக்கு எப்படி ஸ்டாலின் பெயர் வந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2019, 07:02 PM IST
அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்!! எனக்கு ஏன் ஸ்டாலின் பெயர்? MKS விளக்கம் title=

சீர்திருத்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனக்கு எப்படி ஸ்டாலின் பெயர் வந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதுக்குறித்து அவர் கூறியது, 

பாரதி மேடையில் பேடும் போது பெயர் மாற்றங்கள் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அவருக்கு இருந்த பெயர், தலைவர் கலைஞர் அவர்களுக்கு இருந்த பெயர். அதேபோல் சிதம்பரம் அவர்களுக்கு இருந்த பெயர், இந்த மணவிழாவை நடத்திக்கொண்டிருக்கும் கலைவாணன் அவர்களுக்கு இருந்த பெயர். இவையெல்லாம் எப்படி மாற்றப்பட்டது என்பது பற்றிய வரலாறு எல்லாம் எடுத்துச் சொன்னார். என் பெயரையும் எடுத்துச் சொன்னார். அதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, மணமக்களை அன்போடு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மணமகனின் பெயர் முத்துவேல் என்கின்ற தமிழ்ப் பெயர் தான். ஆனால், மணமளின் பெயர் ‘ஆசிகா இது’ தமிழ் பெயரா என்பது கேள்விக்குறிதான்!?

நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். இவ்வளவு சொல்கிறாயே நீ, ஸ்டாலின் என்ற பெயர் என்ன தமிழ்ப் பெயரா? ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லையே என்று சிலர் கேட்கலாம்.

என் பெயர்க்காரணம் குறித்துதான் பாரதி அவர்கள் விளக்கிச் சொன்னார். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் அவர்கள் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள். காரணம், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கையின்மீது அளவுகடந்த பற்று உண்டு - பாசம் உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.

அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பப் பெயர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். முரசொலி மாறன், செல்வம், அமிர்தம் இதெல்லாம் தலைவர் கலைஞர் குடும்ப உறவினர் பெயர்கள். அவருடைய பிள்ளைகள், என்னுடைய மூத்த அண்ணனுக்கு, என்னுடைய தாத்தாவின் நினைவாக முத்துவேல் என்ற அவருடைய பெயரை சூட்டினார்கள்.

அதேபோல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசானாக விளங்கியவர் பட்டுக்கோட்ட அழகிரிசாமி அவர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். மேடையில் இவ்வளவு வீராவேசாமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று தலைவர் கலைஞர் அவர்களே நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள்.

அதேபோல், என்னுடைய தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்செல்வி, கனிமொழி என்று, வீட்டில் இருக்கும் அத்தனைப் பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ் பெயர்கள்தான்.

ஆனால், என்னுடைய பெயர் காரணத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த பெயர் வைத்த காரணத்தால் நான் பல இடர்களை அனுபவித்திருக்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, இரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை முழித்து, முழித்து பார்ப்பார்கள்.

ஏர்போட்டில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு!

இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் கான்வெண்ட் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பெண்கள் மட்டும்தான் படிக்க முடியும். ஆண்கள் படிக்கமுடியாது. ஆனால், முன்பு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. அதுதான், தமிழ்நாட்டில் நம்பர் 1 கான்வென்ட் என்று சொல்வார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் எப்படியாவது என்னையும், என் தங்கை தமிழ்செல்வியையும் சேர்க்க வேண்டும் என்று நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் சென்றிருந்தார்கள். முரசொலி மாறன் அவர்கள் தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைப்பதற்கு ஒரு காப்பளராக இருந்தார்.

அப்போது அண்ணா சாலையில் முரசொலி அலுவலகம் எதிரில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே, அங்கே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து 'அட்மிசன்' எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டார்கள். அப்படி, சேர்ந்தப் பிறகு முதன்முதலில் நான் பள்ளிக்கூடத்திற்குபோகும் போது, அந்தப் பள்ளியின் தாளாளர் [கரெஸ்பாண்டன்ட்] முரசொலி மாறன் அவர்களிடத்தில், "இவர்கள் இரண்டு பேரையும் இப்போதே சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள். ஏனென்றால், இரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு அவரது சிலைகளையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடமாக இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும். எனவே, இந்த பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்", என்று சொல்லியிருக்கிறார்.

உடனே தலைவர் கலைஞரிடத்தில் முரசொலி மாறன் அவர்கள் இதை சொன்னபோது, “நான் ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்” என்றார். இது வரலாறு! எனவே, இப்படி பெயரை வைப்பதில்கூட திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது.

இந்த திருமணமாகாதவர்களும் வந்திருப்பார்கள். விரைவில் திருமணம் முடிக்க இருப்பவர்களும், விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களும் வந்திருப்பீர்கள். எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் - சூட்டுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்று அடுத்த வருடமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதில் அவசரம் காட்ட வேண்டும் என்று அவசியவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் அதுபோன்று ஒரு நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் அன்பான வேண்டுகோளை எடுத்து வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா சிறப்புகளும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச்சொல்லியிருக்கக்கூடிய ‘வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய்’ வாழுங்கள் - வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News