காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு சில பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி இருந்த நிலையில், நாளுக்கு நாள் பலருக்கும் ஏற்படுவதைக் கண்டு கிராம மக்களே அச்சமடைந்தனர். கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களுக்கு இந்தப் பிரச்சனை குருவிமலை ஊராட்சியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க | வடிவேல் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரைக் காணோம்’ என்று கிராம மக்கள் போராட்டம்
அதிலும், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பலருக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அப்பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தீவிர வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக கடந்த 8 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், ராஜம்மாள் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ராஜம்மாளின் 45 வயதுடைய மகன் குமார் என்பவருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பெற்று வந்த குமார், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் ஹரிஷ், N.விஜயகுமார், துரை, பாவா , குமார், சுப்பிரமணி, மலர், கீர்த்தனா, உஷா, சுஜாதா, M.முருகன், ஜீவ தர்ஷினி ,நிஷாந்த், ஜானகிராமன் உள்ளிட்ட 16 பேருக்கு வாந்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊருக்குள் இந்த விவகாரம் பல்வேறு புரளிகளையும் கிளப்பியுள்ளது. கிராமத்தில் பேய் உலவுவதாகவும், காத்துக்கருப்பு உலவுவதாகவும், சாமிக்குத்தம் எனவும் பொதுமக்கள் சிலர் புலம்பி வருகின்றனர். இதன் பீதி காரணமாக பலர் உறவினர்களின் வீடுகளுக்குத் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் குருவிமலை கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் ‘இதுவாக’ இருக்குமோ என பொதுமக்கள் ஒரு விவகாரத்தை முன்வைத்துள்ளனர். அதுதான், ஆழ்துளைக் கிணறு. அந்தக் கிணற்றில் இருந்துதான் குருவிமலை ஊராட்சிக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தத் தண்ணீரைத்தான் இக்கிராம மக்கள் அருந்துகின்றனர். எனவே, அதில் எதாவது பிரச்சனை இருக்குமா என்று குருவிமலை மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனைப் புகாராக ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | காஞ்சிபுரம் மாநகராட்சியின் அலட்சியம் - மாடுகளை காவு வாங்கும் மின்சாரம்.!
இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றின் தண்ணீரை, ஊராட்சி மன்ற செயலாளர் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் என்ன பிரச்சனை என்று விரைவில் தெரியவந்துவிடும் என கிராம மக்கள் நம்புகின்றனர். சுகாதாரத்துறையின் மெத்தன போக்கால்தான் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் குருவிமலை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எது எப்படியா ? பிரச்சனை என்னவென்று தெரிந்தால்தானே தீர்வை நோக்கிப் போவதற்கு. விரைவில் இந்த அமானுஷ்யப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என குருவிமலை மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்!.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR