2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், எதையும் மறுக்க மாட்டேன், ஜாமீனிலும் செல்ல விரும்பவில்லை என்று கூறி வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
தேசத்துரோக குற்றச்சாட்டில் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட வைகோ 15நாள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அவரை மீண்டும் 27-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:-
2009-ம் ஆண்டு மத்தியில் காங்கிரசும், தம்,தமிழகத்தில் திமுக ஆட்சியும் நடந்தது. இந்த இரு கட்சிகளும், லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதை மக்களுக்கு நினைவுப்படுத்தியதால் இந்த வழக்கில் நான் சிறை சென்றேன் என்றார்.
தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள நிவாரண நிதி யானைப்பசிக்கு சோளப்பொறி என்றும், விவசாயிகள் போராட்டத்தை, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. மோடி, விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்குப் பாதகமாகவும் செயல்படுகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை, தமிழகத்துக்குள் கொண்டுவர விட மாட்டோம். மதுவுக்கு எதிராகப் போராடிய பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை' என்றார்.
இந்த தேச விரோத வழக்கில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுக்க மாட்டேன். நான் என்ன பேசினேனோ அதை அப்படியே ஒப்புக்கொள்வேன். இதனால் எனக்கு இந்த தேச துரோக வழக்கில் சிறை தண்டனை கிடைத்தாலும், அதை தயங்காமல் ஏற்பேன். இதை நான் எதையும் மறுக்கப் போவதில்லை என்று கூறிய அவர் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்றார்.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்குள் முன்பு குவிந்த மதிமுக தொண்டர்களுடன் சற்று நேரம் பேசினார் வைகோ. பிறகு வைகோ மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.