தமிழக வீரர், வீராங்கணை, பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர்

Last Updated : May 26, 2017, 02:04 PM IST
தமிழக வீரர், வீராங்கணை, பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கிய முதல்வர் title=

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கணைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.4 கோடி அளவிலான ஊக்கத் தொகையை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் ஊக்குவிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்.

2010-ம் ஆண்டு வங்கதேசத் தலைநகரம் டாக்காவில் நடைபெற்ற 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு 12 பேர்களுக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள்.

2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 66 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக, 2 கோடியே 83 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் அவர்களது 29 பயிற்சியாளர்களுக்கு 27 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.

2015-ம் ஆண்டு சர்வதேச மகளிர் சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற மோனிஷாவுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை 

2016-ம் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபாடி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் சேரலாதனுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை.

2016-ம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற 5-வது பீச் ஆசியன் கபாடி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அந்தோணியம்மாளுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை.

2016-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற சிவ மகாதேவனுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை.

2016-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற 4-வது ஆசிய இளையோர் கபாடி வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவித்ரா மற்றும் நதியாவுக்கு தலா 3 இலட்சம் வீதம், மொத்தம் 6 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

2016-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணாவுக்கு 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை.

மொத்தம் 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய 42 பயிற்சியாளர்களுக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். இவ்வாறு தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முனைவர் ராஜேந்திர குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் அஷோக் டோங்ரே மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Trending News