Thol Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரும் ஒரே விழாவில் கலந்து கொள்ள இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய்யுடன் ஒரே மேடையில் அமர வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். முதலில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற நூலை திருமாவளவனும், விஜய்யும் இணைந்து வெளியிட இருந்தனர். ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக நான் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இந்த பகுதிகளில் விரைவில் தடுப்பணைகள் கட்டப்படும்! அமைச்சர் துரைமுருகன் உறுதி!
திருமாவளவன் அறிக்கை
" எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல். ஆதவ் அர்ஜூன் அவர்களின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று (திசம்பர் -06) சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல்14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது.
அந்நிகழ்வில் ஆங்கில 'இந்து இதழின்' ஆசிரியர் திரு. இராம் அவர்களும், மும்பையிலிருந்து திரு. ஆனந்த்டெல்டும்டே அவர்களும் பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. சில மாதங்களுக்குப் பின்னர் முதல்வர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்; திரு.இராகுல்காந்தி அவர்களை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. அதன்பின்னர், நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும்.
நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. திரு. விஜய் அவர்களின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது, "டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.
ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது? அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது? அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது? கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகளையோ, திருமாவளவனையோ ஒரு பொருட்டாகவேக் கருதாத அந்த நாளேடு, திடுமென தலைப்புச் செய்தியில் எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறது என்றால் அதன் உள்நோக்கம் என்ன?
திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும். மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே! இந்நிலையில், இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை?
"ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் " என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம், "திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார் " என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தாய்ச்சொல் - 06
-------------------
யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!
-- பகையின்
சூதுமறிந்தே தகர்த்தோம்!
---------------------
என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே வணக்கம்!" எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும்… pic.twitter.com/OPrVg6uZwC
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 6, 2024
மேலும் படிக்க | டாஸ்மாக் தொடர்பாக புதிய திட்டம்! இனி அரசே 10 ரூபாய் கொடுக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ