பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவரினால் நிகழ்ந்த பேரழிவு என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ATM வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
இந்த பணமதிப்பிலப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கருப்பு தினமாக அனுசரித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதனால் அவர்கள் தெருவிற்கு கொண்டு வரப்பட்டார்கள். வரிசையில் காத்திருந்து மக்கள் பலர் உயிரிழந்தனர்.
பலர் தங்களது வேலையை இழந்தனர். நிறுவனங்கள் பல மூடப்பட்டன. இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பின்னோக்கி தான் சென்றுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு தனி மனிதர் ஒருவரால் நிகழ்ந்த பேரழிவு'' என பதிவிட்டுள்ளார்.
People were brought on streets with their money declared illegal. Indians stood in endless lines & many died outside banks, millions of jobs were lost, small industries shut & the economy hit irreversibly. #DestructionByDemonetisation is a one man made disaster for India. pic.twitter.com/MVubuh6Cgt
— M.K.Stalin (@mkstalin) November 8, 2018