ஒவ்வொரு மீன்பிடி படகையும் சீரமைத்து எடுத்து வர ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.... தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருக்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் அணுகுமுறை கடுமையானதாகவும், மனிதநேயமற்றதாகவும் மாறியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வரும் சிங்களக் கடற்படை, மீனவர்களை விடுதலை செய்தாலும் படகுகளை விடுவிக்க மறுத்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தான் இப்போது அழிக்கப்படவுள்ளன.
இலங்கை நீதிமன்றங்களின் இந்த நடவடிக்கைகள் தேவையற்றவை; இரு நாட்டு மீனவர்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இப்போது அழிக்க ஆணையிடப்பட்டுள்ள படகுகள் எந்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவை அல்ல. அவை ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்காக விடுவிக்கப்பட்டவை. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது வீண் சிக்கலை உருவாக்கும்.
ALSO READ | இனி தபால் நிலையத்திலும் ஆன்லைன் பணப்பரிவர்தனை செய்யலாம்..!
வங்கக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2014-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகள் அந்த ஆண்டின் இறுதியில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின் 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும், 37 படகுகள் மன்னார் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அப்படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க கடந்த 2018-ஆம் ஆண்டின் இறுதியில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனுமதி வழங்கின. அதன்படி கடந்த ஆண்டு இலங்கை சென்ற தமிழக மீனவர்கள் 10 படகுகளை மட்டும் மீட்டு வந்தனர். மீதமுள்ள படகுகளை சீரமைக்க வேண்டியிருந்ததால், அதற்கான பணியாளர்களை அழைத்துச் செல்ல சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் அடுத்தடுத்து பல சிக்கல்களும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலும் ஏற்பட்டதால் படகுகளை மீட்டு வர முடியவில்லை.
இலங்கை அரசும், நீதிமன்றமும் ஒரு சில மாதங்கள் கால அவகாசம் கொடுத்து, அதற்குள்ளாக 121 படகுகளையும் எடுத்துச் செல்லும்படி ஆணையிட்டிருந்தால், இந்த பிரச்சினைக்கு மிகவும் எளிதாக தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், தமிழக மீனவர்களின் நிலைப்பாடு குறித்து எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து படகுகளை அழிக்க ஆணையிட்டிருப்பது தான் மீனவர்கள் தரப்பில் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு படகின் மதிப்பும் பல கோடிகள் இருக்கும். அந்த படகுகளை அழிப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து விடும்.
இலங்கை நீதிமன்றங்களின் உத்தரவை நிறைவேற்றுவது யாருக்கும், எந்த வகையிலும் பயனளிக்காது. தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப்பட்டால் அது அப்பகுதியில் கடல் மேலும் மாசு அடையவே வழி வகுக்கும். 121 படகுகளையும் அவர்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் மிகவும் எளிமையான தீர்வு ஆகும். எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து படகுகளையும் சீரமைத்து எடுத்துச் செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசும், நீதிமன்றமும் அவகாசம் வழங்க வேண்டும். இந்த அனுமதியை இலங்கையுடன் பேசி மத்திய, மாநில அரசுகள் பெற்றுத் தர வேண்டும்.
அதேநேரத்தில் இலங்கை துறைமுகங்களில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைத்து அங்கிருந்து எடுத்து வருவது மிகவும் சவால் நிறைந்ததாகும். அதற்கு பெரும் பொருட்செலவும் ஆகும் என்பதால், ஒவ்வொரு மீன்பிடி படகையும் சீரமைத்து எடுத்து வர ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.