மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு!!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுகவிடம் இருந்து 25% இடங்களை கேட்க முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சியையும் பாஜக குறிவைத்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தேமுதிகவும் 3 இடங்களை கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை தொடர்ந்து, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாக தேர்ந்தெடுப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 முதல் 2001ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், 2006 ஆம் ஆண்டு மறைமுக தேர்தல் முறையும் இருந்தது. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வரை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்கின்றனர். பிரதமரை எம்.பி.,க்கள் தேர்வு செய்கின்றனர். அதுபோல் தற்போது, மேயரை, கவுன்சிலர்கள் தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சட்டத்திற்கு உட்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் தான், கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்வு செய்தனர். 2006 ஆம் ஆண்டு திமுகவும் மறைமுக தேர்தலை தானே நடத்தியது. தேர்தல் முறை மாறினாலும், உள்ளாட்சி தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது என்றார்.