ஆசிரியர் நாளான இன்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:
மாணவர்களின் ஏற்றத்திற்கான ஏணியாக திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சமூகக் கடமை உள்ளது. தமிழக பாடத்திட்டத்தை ஆட்சியாளர்கள் மேம்படுத்தத் தவறியதாலும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும், நகர்ப்புற பணக்கார மாணவர்களுக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் நீட் தேர்வை மத்திய அரசு திணித்ததாலும் மருத்துவராவதற்கு அனைத்துத் தகுதிகளும் கொண்ட அனிதா என்ற மாணவியை இழந்திருக்கிறோம். இனியும் இத்தகைய சூழல் உருவாகாமல் தடுக்கும் திறன் ஆசிரியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
சமூகத்திற்கு ஏற்றம் தரும் ஏணியாக திகழும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏழாவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்த பிறகும் ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நலனுக்கான வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டனர். ஆசிரியர்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும், அனைத்து மட்டங்களிலும் ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.