அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட்குறிப்பு வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை, சைக்கிள், மடிகணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வி திறை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வி துறையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலையும், ஞாபக சக்தியையும் வளர்க்கவும், போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் கல்வி கற்கும் சூழல் அமையும் வகையில் தற்போது பாடத்திட்டங்களும் தேர்வு முறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நாட்குறிப்பு வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வி செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு இலவச நாட்குறிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் அன்றாட வகுப்பறை நடவடிக்கை, கற்றல் குறித்த தகவல்கள், செயல்பாடு போன்றவை குறித்து பெற்றோருக்கு ஆசிரியர்கள் தெரியப்படுத்தும் விதமாக நாட்குறிப்பில் குறிப்பு எழுதி அனுப்ப வேண்டும் எனவும், பெற்றோரும் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் நாட்குறிப்பில் எழுதியுள்ள தகவல்களை தினமும் பார்க்க அறிவுறுத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் குறித்தும் மாணவர்கள் நாட்குறிப்பில் எழுத வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 55 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று பள்ளி கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.