கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 'கஜா' புயல் தாக்கம் அதிகம் இருந்தபோதிலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களி கஜா பாதிப்பு மிகஅதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட போது இப்பகுதிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பாதிப்பு குறித்து, களத்திற்கு நேரடியாக செல்லாமல், ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பார்வையிட்டதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி, இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்கால் விரைவு ரயில் மூலமாக, நேற்று இரவு புறப்பட்டார்.
அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் பயணித்தனர். இன்று அதிகாலை நாகை வந்தடைந்த முதலமைச்சர், விருந்தினர் மாளிகையில் தங்கி பின்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும் உறுதியளித்த முதல்வர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம பொருட்களையும் வழங்கினார்.
தமிழக முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்!