நடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில், 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த தேர்வில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிவான நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் வழிவகை செய்யப்பட்டது.
அந்தத் தேர்விலும் தேர்வாகத மாணவர்கள் மீண்டும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பே படிக்க வேண்டும். இந்தச் சட்டத்திருத்தம் 2019 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசிதழில் அறிவிக்கை தெரிவிக்கிறது.
அதேவேளையில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது., தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி மொழிப்பாடத்தில் தமிழ் தாள் 1, தமிழ் தாள் 2, ஆங்கிலம் தாள் 1, தாள் 2 என்ற வகையில் தேர்வுகள் நடைபெறாது. தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளது.