Tamil Nadu Latest News Updates: கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்புவிடுத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்கள் இந்தத் திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிக்கை ஒன்றையும் நேற்று வெளியிட்டுள்ளார்.
குடும்பத் தொழில் அடிப்படையில் இல்லாமல்...
அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில்,"சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி "கலைஞர் கைவினைத்திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழக அரசின் விரிவான திட்டம்
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த திமுக அரசு, அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் தனியாக திட்டம் தொடங்கப்படும் என சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்பித்த தமிழ்நாடு அரசு திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்த்தது.
ஆனால், மத்திய அரசின் அடுத்துக்கட்ட அறிவிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்பின்னரே, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
இந்த கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
யார் யார் பயன் பெறலாம்?
மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், www.msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு சென்று இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ