தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் வரலாறும் பிண்ணனியும்: அண்ணா பெரியார் கலைஞர் கருணாநிதி

Madras Province to Tamil Nadu Journey: தமிழ்நாடு நாள் என்பது இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், இதன் பின் உள்ள அரசியல் போராட்டங்களும், தியாகங்களும் எண்ணிலடங்காதவை....  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 18, 2022, 10:08 AM IST
  • தமிழ்நாடு நாள் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது
  • தமிழ்நாடு தினம்: இதற்கு பின் உள்ள அரசியல் போராட்டங்களும், தியாகங்களும் எண்ணிலடங்காதவை
  • 1967 ஜூன் 18ம் தேதி மெட்ராஸ், தமிழ்நாடு என பெயர் மாறியது
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் வரலாறும் பிண்ணனியும்: அண்ணா பெரியார் கலைஞர் கருணாநிதி title=

சென்னை: மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. தலைநகரமான சென்னையை ஆங்கிலத்திலும் CHENNAI என்றே அழைக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1996ம் ஆண்டில் ஆணையிட்டார். தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ம் தேதியை (இன்று) தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய நாளில் தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழ்நாடு தினம் இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கலைவாணர் அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மணல் சிற்பமும் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள், செம்மொழி பூங்கா, சென்ட்ரல் சதுக்கம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடைபெற உள்ளது. கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழகத்தில் 20 இடங்களில், தமிழ்நாடு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 

'தமிழ்நாடு நாள்' விழாவை ஒட்டி, பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, கலை பண்பாட்டு துறை ஏற்பாடு செய்து உள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு நாள் எப்பொழுது கொண்டாடப்பட வேண்டும்

தமிழன் தன்னைப் பிறமொழிக்காரர்கள் சுரண்டாமல் இருக்க வேண்டுமானால், தமிழர் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்ச்சி பெற வேண்டும் என்று தந்தை பெரியார் கருதினார். எனவே, ஒரே இனம் என்ற உணர்ச்சியை ஊக்குவிக்க, தமிழ்நாடு என்ற பெரும் உதவும் என்றும், அதனால் மெட்ராஸ் மாகாணத்திற்கு, தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் கூறுவதாக தந்தை பெரியார் அறிவித்தார்.

1950களில் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்களை நடத்தினார். தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனாரின் மரணப்படுக்கையில் அவரை பேரறிஞர் அண்ணா சந்தித்தார்.

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்கை, 12 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் வாய்ப்பு அறிஞர் அண்ணாவுக்கு கிடைத்தது. தமிழ்நாடு பெயர் மாற்றத் தீரிமானத்தை நிறைவேற்றியபோது, ‘தமிழ்நாடு... தமிழ்நாடு... தமிழ்நாடு...” என மூன்று முறை முதலமைச்சர் அண்ணா முழங்கினார். 

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு, 1956 நவம்பர் 1 ந் தேதி சென்னை மாநிலம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாகின. தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள “தமிழ் மாநிலம்” உருவானது.

மொழிவாரியாக உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இறுதியில் தமிழ்நாடு உருவானது என்பது வரலாறு.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா: பாமக சந்தேகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News