கேரளாவில் மாநிலத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
கேரளாவில் தொடர்நது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனம் முதல் மிக கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள நிவாரனங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.