பிடிஆர் -ஐ மட்டும் பாஜக டார்கெட் செய்வது ஏன்? ஆடியோ விவகாரத்தில் இருந்து எப்போது மீள்வார்?

தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2023, 02:49 PM IST
  • பிடிஆர்-ஐ டார்கெட் செய்யும் பாஜக
  • ஆடியோ விவகாரத்தின் பின்னணி
  • அப்செட்டில் இருக்கும் நிதியமைச்சர்
பிடிஆர் -ஐ மட்டும் பாஜக டார்கெட் செய்வது ஏன்? ஆடியோ விவகாரத்தில் இருந்து எப்போது மீள்வார்? title=

பிடிஆர் ஆடியோ லீக் 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியிட்ட ஆடியோ அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. அடுத்தடுத்து 2 ஆடியோக்கள் பிடிஆர் பேசியதாக வெளியிடப்பட்டன. இரண்டு ஆடியோக்கள் குறித்தும் அறிக்கை மற்றும் வீடியோ மூலம் மறுப்பு தெரிவித்த நிதியமைச்சர் பிடிஆர், அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட போலி ஆடியோ என்றும் விமர்சித்தார். அரசியல் களத்தில் நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் செய்யும் தரம் தாழ்ந்த கோழைத்தனமான செயல் என்றும் கடுமையாக சாடினார். பல்வேறு இடங்களில் தான் பேசியதை எடுத்து வெட்டி ஒட்டி உண்மைக்கு மாறாக திரித்து வெளியிடப்பட்ட ஆடியோ என்றும் விளக்கம் அளித்தார்.

முதலமைச்சர் விளக்கம் 

இது குறித்து திமுகவினர் பேசும்போது, திரித்து போலியாக வெளியிடப்பட்ட ஆடியோக்களுக்கு ஏன் நிதியமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்?. கடந்து செல்ல வேண்டியது தானே என ஆதங்கப்படுகின்றனர். கட்சி தலைமை பற்றி அவதூறாக அவர் கூறியிருப்பதாக அந்த ஆடியோ இருப்பதால், விளக்கம் கொடுத்தது சரி என்றும், அவருக்கு கட்சி தலைமை ஆதரவாக இருக்க வேண்டும் என்ற குரல்களும் திமுகவுக்குள்ளேயே எழுந்திருக்கின்றன.

மேலும் படிக்க | பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து காட்டமாக பேசிய முக ஸ்டாலின்!

அதற்கேற்றார்போல் திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிடிஆர் ஆடியோ குறித்துபேசும்போது ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது, இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு விளக்கக் கொடுத்து விளம்பரம் தேடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என தன்னுடைய நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்திவிட்டார். அதனால் அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பெயர் இருக்காது என திமுகவினர் நம்புகின்றனர்.

பாஜகவின் குறி பிடிஆர்

திமுக அமைச்சரவையில் பல சீனியர்கள் இருக்கும்போது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மட்டும் பாஜக குறிவைத்தது ஏன்? என்று விசாரிக்கும்போது திமுகவினர் பல்வேறு தகவல்களை கொட்டி தீர்த்தனர். பிடிஆர்-ஐ அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எதிர்க்க முடியாதவர்கள் செய்யும் கோழைத்தனமான செயல் வடிவம் தான் இந்த ஆடியோ லீக். அவர் மத்திய பாஜக அரசின் தவறுகளை தெளிவாக சுட்டிக்காட்டி விமர்சிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

நிதியமைச்சரின் கேள்விகள்

அரசியல் ரீதியாக தமிழக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி கேட்டால், எல்லா துறைகளிலும் சிறப்பாக விளங்கும் எங்களுக்கு ஏன் நீங்கள் அறிவுரை சொல்கிறீர்கள்?. எங்களை விட சிறப்பாக செயல்படும் ஒரு துறையை முன்மாதிரியாக காட்டுங்கள். கல்வி, சுகாதாரம், தொழில் கட்டமைப்பு, இட ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் தேசிய மாதிரியைவிட தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதுவுமே செய்யாமல் அல்லது எங்களைவிட சிறப்பாக செய்து சாதித்து காட்டாமல், ஒரு திட்டத்தை கொண்டு வந்து ஏன் எங்களை பின்பற்ற சொல்கிறீர்கள்?. நாங்கள் சாதித்து காட்டியதை நீங்கள் பின்பற்றுங்கள். பாஜக ஆளும் மாநிலங்கள் எத்தனை தமிழகத்தை விட சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிடிஆருக்கு போட்ட ஸ்கெட்ச்

சமூக நீதிக்காக, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் கொடுக்கும் இலவசங்களை கொச்சைப்படுத்தும் அதே பாஜக மற்ற மாநிலங்களில் இலவசங்களை அறிவிக்கவில்லையா?. இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டதாக ஆதாரமற்ற, மட்டமான விமர்சனங்களை வைப்பவர்கள் இப்போது இலவசங்களை அறிவிப்பது ஏன்? என்பது போன்ற கேள்விகளை சரமாரியாக கேட்கிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்களால் ஒரு பதிலை கூட கொடுக்க முடியவில்லை. இதுவரை கொடுக்கவும் இல்லை. மேலும், அவர் எழுப்பும் கேள்விகள் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக இருப்பதால், அவரை எப்படியாவது முடக்க பாஜக நினைக்கிறது. 

மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்

ஸ்கெட்ச் வொர்க் அவுட் ஆச்சா?

ஜிஎஸ்டி கூட்டத்திலும் தரவுகளுடன் பேசுகிறார். கேள்விகளை எழுப்புகிறார். அவரின் கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை மத்திய அரசால் கொடுக்க முடியவில்லை. இதையெல்லாம் மனதில் வைத்தே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை முடக்க எடுக்கப்பட்ட அசைன்மென்ட் தான் இந்த ஆடியோ விவகாரம். இதனால் அவரை முடக்க முடியாது, கட்சி தலைமை அவருக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தனர். அதேநேரத்தில் பிடிஆருக்கு போட்ட ஸ்கெட்ச் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருப்பதாக தமிழக பாஜக நம்புகிறது. இன்னும் சில ஆடியோக்கள் இருப்பதாக எச்சரிக்கும் பாஜகவினர், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என்றும் கூறி வருகின்றனர். அதனால், எப்போது என்ன ஆடியோ வெளியாகப்போகிறது என்று ஆளும் தரப்பும் முன்கூட்டியே தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறதாம். 

பிடிஆர் அப்செட்

இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் அப்செட் ஆகியிருக்கிறாராம். விளக்கம் கொடுத்தாலும், இதுவரை இருந்த நம்பிக்கை இனி இருக்குமா? என்ற கேள்வியுடன் இருக்கும் அவர், தன் தரப்பு விளக்கத்தை முதலமைச்சரை சந்தித்து தெரிவித்துவிட்டாராம். இனி கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அவருடைய இப்போது எண்ணமாக இருக்கிறதாம். 

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News