Marudhamalai Temple 160 Feet Murugan Statue: கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் உயர்ந்த முருகர் சிலை அமைப்பது தொடர்பாகவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஜன. 27) ஆய்வு மேற்கொண்டார். கோயிலை ஒட்டி பட்டா இல்லாத இடங்களில் உள ஆக்கிரமிப்புகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ் கடவுள் முருகன் கோயில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 90 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. திமுக ஆட்சிக்கு பிறகு 60-70 வயது உள்ளவர்களுக்கு அரசு கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்து கொடுத்து வருகிறோம்.
7 முருகர் கோயில்களில் பெருந்திட்ட பணிகள்
7 முருகர் கோயில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் செய்யப்பட்ட வருகின்றன. பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட கோயில்களில் பெருந்த்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை மருதமலை கோயிலில் ஏற்படுத்தப்பட உள்ளன. முருகன் திருக்கோயில்களில் பக்தர்கள் அதிகரித்து வருவதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு லிப்ட் வசதி மே மாதம் முதல் முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டு வரும்.
மருதமலையில் 160 அடி முருகன் சிலை
மருதமலை முருகன் கோயிலில் 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யபட்டு வருகின்றன. ஆசியாவில் அதிக உயரம் கொண்ட சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக அன்னதானம்
தைப் பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு தரப்படும். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அன்னை தமிழில்தான் குட முழுக்கு நடைபெறும்" என தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர்,"வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்க உள்ளனர். அங்கு ரூ.21 கோடி செலவில் ஏற்கனவே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
ஆசியாவிலேயே பெரிய முருகன் சிலை
மருதமலை முருகன் கோயிலில் 160 அடி முருகன் சிலை அமைய இருப்பது உள்ளூர்வாசிகளுக்கும், பக்தர்களுக்கும் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர் சோலை என ஆறு திருத்தலங்களிலும் முருகப் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோயில் 7வது படை வீடாக திகழ்கிறது எனலாம். இங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
இந்தச் சூழலில், மருதமலையில் ஆசியாவிலேயே உயரமான சிலையை வைப்பது என்பது இன்னும் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். சேலம் மாவட்டத்தின் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் 146 அடிக்கு அமைக்கப்பட்டுள்ள முருகன் சிலைதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருதமலையில் 160 அடிக்கு முருகன் சிலை நிறுவப்பட இருக்கிறது. மலேசியாவில் முருகப் பெருமானின் கோவில் அமைந்துள்ள பத்து மலை குகை பகுதியில் 140 அடி உயரத்திற்கு முருகப் பெருமானின் சிலை அமைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ