சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக அம்மா கட்சி நட்சத்திர வேட்பாளர் சி.ஆர். சரஸ்வதியின் பிரச்சார வேன் மீது அழுகிய தக்காளி, கற்கள், செருப்பு வீசப்பட்டதால் பதற்றத்தை ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்கேநகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை ஆதரித்து ஆர்கே நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு இருந்த மதுசூதனன் ஆதரவாளர்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார் என்று சொன்னீங்களே, ஆனா ஜெயலலிதாவை பிணமா தானே கொண்டு வந்தீங்க என்று கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சரஸ்வதி, அங்கு இருந்து செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டார்.
தொடர்ந்து மேயர் பாசுதேவ் தெரு, வீராகுட்டி தெரு சந்திப்பில் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கு வந்தனர். இதனால் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரை வேறு பக்கம் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் செல்லாமல் அங்கேயே இருந்தனர்.
அப்போது மார்க்கெட்டிற்கு வந்த பெண்கள் சிலர் சி.ஆர்.சரஸ்வதியின் பிரசார வேன் மீது அழுகிய தக்காளி, கற்கள், செருப்புகளை வீசினர். அதனை தொடர்ந்து சி.ஆர்.சரஸ்வதி அங்கிருந்து புறப்பட்டார்.