அத்திவரதரை ஸ்டாலின் விரைவில் தரிசிக்க வருவார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். இவரைப்போல் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் அத்திரவரதரைத் தரிசனம் செய்ய காஞ்சிபுரம் பெருமாள் கோவில் வந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரைத் தரிசிக்க வருவார்.
திமுக-வைச் சேர்ந்த ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது. ஸ்டாலின் கூட நாத்திகர் கிடையாது. அவருக்கு எல்லா நம்பிக்கைகளும் இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின், அவரின் தாய், மனைவி மூலம் இறை நம்பிக்கைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார். அதனை நான் வரவேற்கிறேன், விமர்சிக்கவில்லை என தெரிவித்தார்.
தன் குடும்பத்தை போல் ஸ்டாலினும் அத்திவரதரை நேரடியாகத் தரிசிக்கும் காலம் விரைவில் வரும். ஏனெனில் தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். அவர் மட்டும்தான் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறார். அவரும் வெளிப்படையாக வருவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் பகிரங்கமாக தெரிவித்தார்.
தொண்டர்கள் வழிதான் தனது வழி என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின், தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் எனில் இனி அவரும் மாற வேண்டியதுதானே? எனவும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.