Senthil Balaji Case: மத்தியப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்டிருந்த விசாரணைக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடும் இன்று இணைந்துள்ளது. பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, திமுக அரசின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் மாநில அரசின் இந்த நடவடிக்கை அமலாக்கத்துறை (ED) அல்லது தேசிய புலனாய்வு முகமையின் (NIA) விசாரணைகளை பாதிக்காது. சிபிஐ-க்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று ஆணையை வெளியிட்டது.
இனி அனுமதி வேண்டும்
அந்த ஆணையில்,"மத்திய புலனாய்வுத் துறை (CBI) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச்சட்டம் பிரிவு 6இன்படி வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 'செந்தில் பாலாஜி ரூ 30 ஆயிரம் கோடி பற்றி சொல்லிடுவாரோ என ஸ்டாலினுக்கு பயம்' - இபிஎஸ்
நாடகம் நடத்தினார்கள்...
அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,"தேவையில்லாத வகையில் அத்துமீறி, அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து சோதனை நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டிருந்தார். இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு முன், 2020ஆம் ஆண்டில், பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் சிபிஐ விசாரணைக்கு கொடுக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப் பெற்றது. காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்டின் இதேபோன்ற நடவடிக்கையின் பின்னணியில் இது வந்தது.
நீதிமன்ற காவல்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட கோரி அமலாக்க பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு பின் அவரை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இடைக்கால ஜாமீனுக்கு கோரிக்கை
நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி வழங்க கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, நேற்று காலை 7:00 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை அமலாக்க பிரிவினர் செந்தில் பாலாஜியை விசாரித்துள்ளதாகவும் அப்போது குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை என்றும் வாதிட்டார்.
'22 மணிநேரம் துன்புறுத்தல்'
மேலும் கைது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனை பரிசோதனையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஏற்கனவே 22 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டுள்ள நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் எனவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை? மருத்துவர்கள் சொல்வது என்ன?
மெமோவை பெறதா அமைச்சர்
இந்த இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்க பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டரும், மூத்த வழக்கறிஞருமான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், கைது மெமோவை பெற செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், அதை நிராகரிக்க கோர முடியாது என வாதிட்டார்.
ஜாமீன் வழங்க முடியாது
கைது தொடர்பாக செந்தில் பாலாஜியின் மனைவி மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பிறப்பித்த உத்தரவு சரியானது என்றும் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றும் இடைக்கால ஜாமின் வழங்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
திடீர் உடல்நலக்குறைவா?
நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென உடல் நலக்குறைவு என்று கூறியிருக்கிறார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வழக்கப் பிரிவு தயாராக இருக்கிறது என்றும் பதினைந்து நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நாளை தீர்ப்பு?
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு அந்த மனு மீதான விசாரணையை நாளை (ஜூலை 15) தள்ளி வைத்தார்.
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கூறிய மனு மீது முடிவு எடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அல்லி அறிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ