சசிகலா 29-ம் தேதி ஆஜராக வேண்டும் -சுப்ரீம் கோர்ட்

Last Updated : Aug 26, 2016, 02:55 PM IST
சசிகலா 29-ம் தேதி  ஆஜராக வேண்டும் -சுப்ரீம் கோர்ட் title=

அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவர் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை சந்தித்தார். பிறகு அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரை தனது ராஜ்யசபா எம்பி பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவால் நிர்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் தனக்கு மிரட்டல் வருவதாக சசிகலா ராஜ்யசபாவில் அழுதபடி கூறினார். 

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலைபார்த்த இளம்பெண் பானுமதியும் அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர். இதுதொடர்பாக சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில்  சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அந்நாளில் ஜாமின் குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி வேலுமணி தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில் தம் மீதான குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டது; தற்போது கிளப்பி சதி செய்கின்றனர். தமிழகத்தில் சென்று ஆஜராக அச்சம் இருப்பதாகவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.மனுவை தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியதாவது சசிகலா புஷ்பா வரும் 29-ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Trending News