மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி காலிங் என்னும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டிருப்பதாக நேற்று அறிவித்தது.
இந்நிலையில், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 42 ஏக்கரில் 17 ஆயிரம் மரங்கள் நடும் பணியை விவசாயிகள் தொடங்கினர்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு பிறகு தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வம் பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சத்தும் 16 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடும் பணியை இவ்வியக்கம் முன்னெடுத்துள்ளது.
கடந்த செப்.30-ம் தேதி முதல் மரம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தாலுகாவில் 2 இடங்களிலும், சோழிங்கர் தாலுகாவில் ஒரு இடத்தில் என மொத்தம் 21 ஏக்கர் விவசாய நிலங்களில் 8,500 மரக்கன்றுகளை விவசாயிகள் நட தொடங்கி உள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் 3 இடத்திலும், செய்யூர் மற்றும் வந்தவாசி தாலுகாவில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 21 ஏக்கரில் 8,500 மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர்.
கீழ்பெண்ணாத்தூர், கீகளூர் கிராமத்தில் உள்ள விவசாயி திரு.பழனி அவர்கள் நிலத்தில் நடந்த மரம் நடும் விழாவில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு.வேட்டவலம் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அவருடன் கீகளூர் கிராமத் தலைவர் திருமதி.சங்கீதா சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் திரு.பாலநந்தன் ஆகியோரும் விருந்தினர்களாக பங்கேற்றனர்.
குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மகோகனி போன்ற விலை மதிப்புமிக்க மரங்களை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். அனைத்து மரக்கன்றுகளையும் அவர்கள் ஒரு வார காலத்திற்குள் நடவு செய்துவிடுவார்கள்.
இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும் விவசாயிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
ALSO READ | காந்தி ஜெயந்தி அன்று 1.16 லட்சம் மரக்கன்றுகளை நடும் ஈஷா அறக்கட்டளை திட்டம்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR