மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும் அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அ.தி.மு.க. தேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியோடு 57 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். போதிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட காரணத்தால் ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் சேரவில்லை. பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இதன் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன.
மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அ.தி.மு.க.விலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. இதன்மூலம் அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்றிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. இதனால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வை புறக்கணித்திருந்தாலும், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், திரு. இல. கணேசன், திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரில் எவருக்காவது வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக திரு. வி. முரளிதரன் அவர்களுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்போல தமிழகத்திற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற திருமதி. நிர்மலா சீதாராமன், திரு. ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான் என்பதை கூற விரும்புகிறேன்.
இச்சூழலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற 37 மக்களவை உறுப்பினர்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். காவிரி நீர், மேகதாது அணை, பாலாறு, நீட் தேர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை மறுக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தி.மு.க.- காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு கே. எஸ். அழகிரி கூறியுள்ளார்.