சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன்... -PMK!

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Last Updated : Oct 23, 2019, 11:13 AM IST
சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன்... -PMK! title=

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,  காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த தனியார் சர்க்கரை ஆலைகள் திவாலாகி விட்டதால், அவற்றுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காததால், மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்டு உழவர்கள் தவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

 தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் 4 சர்க்கரை ஆலைகளை நடத்தி வந்த திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பிடம் கடந்த 2016-ஆம் ஆண்டு வாங்கிய ரூ.159 கோடி கடனை முறையாக செலுத்தவில்லை. வங்கிகளுக்கு வட்டியும் முதலுமாக செலுத்த வேண்டிய ரூ.149.36 கோடியை செலுத்த முடியாத நிலையில், கடந்த ஜூலை மாதன் திவாலானதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி, தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி, கோட்டூர், கடலூர் மாவட்டம் இறையூர், ஏ.சித்தூர் ஆகிய இடங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.125 கோடி நிலுவைத் தொகையையும் வழங்கவில்லை.

காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் கடன் வாங்கி, அதைக் கொண்டு தான் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். கரும்பை அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிய பின்னர், அதற்கான கொள்முதல் விலையை வசூலித்து தான், வங்கிகளில் வாங்கிய கடனை அடைப்பது வழக்கம் ஆகும். ஆனால், திரு ஆரூரான் குழும ஆலைகள்  வழங்க வேண்டிய ரூ.125 கோடி இன்னும் கிடைக்காததால், வங்கிகளில் தாங்கள் வாங்கிய பயிர்க்கடனை உழவர்களால் அடைக்க முடியவில்லை. அதனால், வங்கிகளில் புதிய கடனை வாங்கவும் முடியாமலும், கடன் கிடைக்காததால் அடுத்த பருவ கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும் உழவர்கள் தவித்து வருகின்றனர்.

ஒரு சர்க்கரை ஆலை நிறுவனம் செய்த முறைகேடு காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான உழவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்க்கடன் கிடைக்காததன் காரணமாக விவசாயிகள் நடப்புப் பருவத்தில் கரும்பு சாகுபடி செய்யாவிட்டால், அதன் தொடர்விளைவுகள் விவசாயிகளை மேலும், மேலும் கடன்காரர்களாக்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைகளின் சொத்துகள் திவால் தீர்வு வல்லுனர்களால் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு உழவர்களின் நிலுவைத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். ஆனால், திவால் தீர்வு விதிகள் அனைத்தும் வங்கிகளுக்கு சாதகமாக இருப்பதால், அவற்றுக்கு ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, அதன் பின்னர் மீதம் இருந்தால் மட்டுமே உழவர்களுக்கு வழங்கப்படும். இந்த முறையில் உழவர்களுக்கு நிலுவைத்தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, திவால் தீர்வு மூலம் கிடைக்கும் நிதி முன்னுரிமை அடிப்படையில் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்.

அதற்கு முன் இடைக்கால ஏற்பாடாக பாதிக்கப்பட்ட உழவர்கள் அனைவரும் அடுத்த பருவ கரும்பு சாகுபடி செய்வதற்கு வசதியாக, அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் புதிய கடன் வழங்க தமிழக அரசு வகை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக தனி அதிகாரி ஒருவரையும் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Trending News