தமிழ்நாட்டில் சூரியஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாட்டில் சூரியஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்காக தனிக் கொள்கையை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்பான தமிழக அரசின் இலக்குகளை எட்டுவதற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள சில நிபந்தனைகள் தடையாக இருப்பது வருத்தமளிக்கிறது.
இந்தியாவில் மரபுசாரா மின்சார உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாடு, 2023-ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 2431 மெகாவாட் அளவுக்கு மட்டுமே சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதிக்கும் குறைவு ஆகும். அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 2500 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்பு ஏற்படுத்துவது மிகவும் சவாலான காரியமாகும். இந்த இலக்கை எப்படியும் எட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வீடுகளின் கூரைகள் மீது சூரியஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு ஏராளமான ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தது.
ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப் பட்டு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள விதிமுறைகளின் விளைவாக வீட்டுக் கூரைகளில் சூரியஒளி மின்தகடுகளைப் பொறுத்தி மின்னுற்பத்தி செய்வது பெருமளவில் குறைந்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய புதிய விதிகளின்படி, வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்தொகுப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.2.25 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவு ஆகும். இது நுகர்வோருக்கு பயனளிக்காது.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகள் நடைமுறைக்கு வரும் முன், அதாவது 31.03.2019 வரை வீடுகளில் சூரியஒளி மின்சார கட்டமைப்புகளை ஏற்படுத்தி மின்னுற்பத்தியை தொடங்கியவர்களுக்கு வேறுவிதமான கட்டண விகிதம் நடைமுறையில் உள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சூரியஒளி மின்சாரத்தில் எத்தனை யூனிட்டை மின்தொகுப்புக்கு வழங்குகிறார்களோ, அத்தனை யூனிட் மின்சாரம் அவர்களின் மொத்த மின்சாரப் பயன்பாட்டிலிருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நுகர்வோருக்கு மிகவும் லாபம் தரும் நடைமுறையாகும்.
இந்த நடைமுறைப்படி, ஒருவரின் வீட்டில் 5 கிலோவாட் சூரியஒளி மின்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால், அதில் ஒரு நாளைக்கு 25 யூனிட் தயாரிக்க முடியும். அதில் பகல் நேரத்தில் 10 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால், மீதமுள்ள 15 யூனிட்டை மின்தொகுப்புக்கு வழங்க முடியும். இரவில் மின்வாரியத்தின் மின்சாரத்தை 15 யூனிட் பயன்படுத்தினால், அதை மின்தொகுப்புக்கு கொடுத்த மின்சாரத்திலிருந்து கழித்துக் கொள்ள முடியும். ஆகவே, 5 கிலோவாட் சூரியஒளி மின்சார கட்டமைப்பை ஒருவர் ஏற்படுத்தினால், அவர் மின்சார பயன்பாட்டுக்காக ஒரு ரூபாய் கூட செலவழிக்கத் தேவையில்லை.
புதிய கட்டண விகிதத்தின்படி மின்தொகுப்புக்கு வழங்கப்படும் மின்சாரம் பயன்பாட்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படுவதற்கு பதிலாக, அதற்கு யூனிட்டுக்கு ரூ.2.25 விலையாக வழங்கப்படுகிறது. அதன்படி 5 கிலோவாட் சூரியஒளி மின்கட்டமைப்பை ஏற்படுத்தியவர் 2 மாதங்களில் 1500 யூனிட் தயாரித்து மின் தொகுப்புக்கு 900 யூனிட் கொடுத்தால் அவருக்கு ரூ.2025 கிடைக்கும். மாறாக, அதே அளவு மின்வாரிய மின்சாரத்தை அவர் பயன்படுத்தியிருந்தால், அதற்கு ரூ.4620 செலுத்த வேண்டியிருக்கும். இதனால் ரூ.2,595 இழப்பு ஏற்படும். இத்தகைய இழப்பை தாங்கிக் கொண்டு சூரியஒளி மின்சாரம் தயாரிக்க யார் முன்வருவர்?
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் 100 கிலோவாட்டுக்கும் கூடுதலான மின்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்திடமிருந்து பாதுகாப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களில் செயல்படுத்தப்படும் சூரியஒளி மின்சார தயாரிப்புத் திட்டங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பெங்களூர் போன்ற நகரங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் கட்டிடங்களின் கூரைகள் மீது சூரியஒளி மின்சாரத் திட்டங்களை வணிக அடிப்படையில் செயல்படுத்த பலரும் தயங்குகின்றனர்.
அதுமட்டுமின்றி, மின்தொகுப்புக்கு வழங்கப்படும் சூரியஒளி மின்சாரத்தை அளவிடுவதற்கான இருமுனை அளவீட்டு மீட்டர்களை பொருத்துவதில் தாமதம் செய்யப்படுகிறது. 2014-ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களில் பலருக்கு இந்த மீட்டர்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனாலும் சூரியஒளி மின்னுற்பத்தியில் ஈடுபட மக்கள் தயங்குகின்றனர். வீட்டுக்கூரைகளில் உற்பத்தி செய்யப்படும் சூரியஒளி மின்சாரத்திற்கான கட்டணம், நடைமுறைக்கு ஒத்துவராத நிபந்தனைகள், இருமுனை மின்சார அளவீட்டுக் கருவி ஆகியவை சார்ந்த குறைகளை களையும் போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் சூரியஒளி மின்னுற்பத்தியில் ஈடுபட முன்வருவார்கள்.
எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின், நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை எதிர்த்து தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதில் வெற்றி பெறுவதன் மூலம், மக்களுக்கு சாதகமான சூரியஒளி மின்னுற்பத்திக் கொள்கையை அரசு செயல்படுத்த வேண்டும்.
அதேபோல், வீட்டுக்கூரைகள் மீது காற்றாலைகளை அமைத்து பசுமைமின்சாரம் தயாரிக்கும் முறையும் இப்போதும் பிரபலமாகி வருகிறது. எனவே, அதற்கான கொள்கையை உருவாக்கி, மானியம் உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்களை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் வீட்டுக்கூரை காற்றாலை மின்சார உற்பத்தியையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.