மொழி மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால் தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கிறேன் என நரேந்திர மோடி....
பிரதமர் நரேந்திர மோடி நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாக் கட்சியினரை தயார்படுத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் கட்சியின் பூத் ஏஜெண்டுகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி வருகிறார். ஏற்கனவே கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு நாளும், தென் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு நாளும் இந்த உரையாடல் நடந்தது.
அதையடுத்து, அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் டெல்லியில் இருந்தபடி உரையாடினார்.
இந்நிலையில், இன்று மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் பகுதி பூத் ஏஜெண்டுகளிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, உறுப்பினர்களிடம் பேசிய அவர் கூறுகையில், மொழி மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் தமிழ் மொழியின் ரசிகன். ஆனால் தமிழ் மொழி பேசத்தெரியாத துரதிர்ஷ்டசாலியாக நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், வளர்ச்சியை மட்டுமே முதல்முறை வாக்காளர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும், வாக்குறுதிகளில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதில் கவனமாக இருப்பதாவும், வாரிசு அரசியலை முதல்முறை வாக்காளர்கள் அறவே வெறுக்கிறார்கள். எனவே, முதல்முறை வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் வாக்குகளை பாஜகவின் பக்கம் திருப்ப வேண்டும். BJP-ல் மட்டுமே சாதாரண மக்கள் கூட உயர்பதவிக்கு வர முடியும் என்றார்.
ஒவ்வொரு நிலையிலும் நாட்டின் நலனுக்காவும் வளர்ச்சி என்னும் குறிக்கோளுடன் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நாமும், மறுபுறத்தில் உள்ளவர்கள் தங்களுக்கென்று சொந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பதற்காக பரம்பரை கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிக்காக அணி திரண்டு உள்ளனர். மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை.
PM: Make first time voters first priority, the first time voter isn't interested in dynasty, he is interested in development, first time voter isn't interested in promises, he is interested in performance, first time voter isn't interested in drama, he is interested in delivery. pic.twitter.com/nSeITWthvs
— ANI (@ANI) January 13, 2019
BJP-க்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும் என்ற மோடி, எதிர்க்கட்சியினர் ஏகப்பட்ட குழப்பத்தில் இருப்பதாகவும், தன்னை பற்றி தவறாக பேசுவதற்கு ஏதும் கிடைக்காததால் இதற்கு முன்னர் எதிரியாக இருந்தவர்கள் கூட்டணி அமைத்துள்ளதாகவும், மோடி அரசு செயல்படாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட பொருந்தா கூட்டணிக்காக அவர்கள் ஏன் தேடிப்போக வேண்டும் என மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.