Courtallam Latest News Updates: தென்காசி மாவட்டம், பழைய குற்றால அருவியானது தற்போது பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பழைய குற்றால அருவி அமைந்துள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காட்டு எல்லைப் பகுதிக்குள் உள்ளதால், பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தினர்.
வனத்துறை அமைச்சர் நேற்று ஆய்வு
இந்த ஆலோசனையை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய குற்றால அருவி செல்லும் சாலையில் வனத்துறை எல்லை பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் சோதனை சாவடி மையம் அமைத்துக் கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் அனுமதி வழங்கினார்.
மேலும் படிக்க | அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்
இந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் (ஆக. 22) தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பழைய குற்றால அருவியை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். அதை தொடர்ந்து, தற்போது பழைய குற்றால அருவி செல்லும் சாலையில் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு அங்கு வன காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒருகாலத்தில் 9 அருவிகளும்...
குறிப்பாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும், அதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முந்தைய காலகட்டங்களில் குற்றாலத்தில் இருந்த 9 அருவிகளும் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. இதனால் மக்கள் அங்கு 24 மணிநேரமும் குளிக்கும் வசதி இருந்தது. அதன்பின்னர், பழந்தோட்ட அருவியும், சிற்றருவியும் வனத்துறையினரின் வசம் சென்றதால் அங்கு தற்போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மெயினருவி மற்றும் ஐந்தருவி ஆகியவையும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமைந்திருந்தாலும் அவை தற்போது வரை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதே நிலைமைதான் பழைய குற்றால அருவிக்கும்...
மக்கள் எதிர்ப்பது ஏன்?
ஆனால், கடந்த மே மாதம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, அந்த சம்பவத்தை காரணமாக கூறி வனத்துறையினர் பழைய குற்றலாத்தை தங்களின் வசம் கொண்டுவர விரும்புகின்றனர். அதாவது, காப்புக்காட்டு பகுதியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தடுக்கவும் வனத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கின்றனர்.
வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்கு பழைய குற்றால அருவி வந்துவிட்டால் அங்கு 24 மணிநேரமும் மக்கள் குளிப்பது தடையாகும் என கூறப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறையும். சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு கடை நடத்தும் வியாபாரிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள். எனவே பொதுமக்கள் வனத்துறையிடம் பழைய குற்றால அருவியை ஒப்படைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது முதற்கட்டமாக வனத்துறை சார்பில் சோதனை சாவடி மையமானது பழைய குற்றாலம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் விரைவில் பழைய குற்றால அருவியானது வனத்துறையினர் வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ