இனி ஆளுநருக்குப் பதில் முதலமைச்சரே மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார்.!

முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 28, 2022, 07:20 PM IST
  • இனி மாணவர்களுக்கு முதலமைச்சரே பட்டம் கொடுப்பார்
  • விவாதமாகிறது ஆளுநரின் அதிகாரம் மற்றும் வரம்பு
  • தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டமுன்வடிவு மசோதா நிறைவேற்றம்
இனி ஆளுநருக்குப் பதில் முதலமைச்சரே மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார்.! title=

ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன ? என்பதுதான் தமிழ்நாட்டில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிடும் அதிகாரம் ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு எவ்வளவு தூரம் உண்டு ? முதலில் தலையிடும் உரிமை இருக்கிறதா ? என்பதெல்லாம் சம கால உரையாடலாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் எந்த உரையாடலும் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும் என்ற கூற்றுக்கு தகுந்தாற்போல், ஆளுநருக்கான அதிகார வரம்பின் உரையாடலும், அதன் நீட்சியாக மாநில அரசின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் ஒரு முக்கியமான சட்டமுன் வடிவு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. 
என்ன அந்த மசோதா ?

மேலும் படிக்க | தமிழகத்திலும் குஜராத் போல மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கலாமே கேள்வி எழுப்பும் முக ஸ்டாலின்

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் ஆளுநரே பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கவுரவிப்பது இதுவரை வழக்கமாக இருந்தது. இனி மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்து பாராட்டு தெரிவிக்கப்போவது ஆளுநரல்ல. அந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். ஆம்.! அப்படிப்பட்ட ஒரு மசோதாவை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. 

முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நிலையில், சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம்  ஆகிய துறைகளுக்கு என்று தனிப் பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார். 

மேலும் படிக்க | துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்...ஆளுநருக்கு தமிழக அரசின் செக்

தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தைத் தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்து வருகிறார். தற்போது புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று அந்த சட்டமுன்வடிவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இனி முதலமைச்சரே தலைமை வகிப்பார். அதாவது, பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு முதலமைச்சரே வழங்குவார் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் ஆகிய அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும்  அந்த சட்டமுன்வடிவு மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டப்பேரவையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.!

மேலும் படிக்க | இந்த விளக்கம் போதுமா?...ஆளுநர் பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News